உறுப்பினர்கள் பங்கு போட்டுக் கொண்டார்கள். எல்லோரும் ஏழைகளாக வாழ்ந்ததால் எல்லோருடைய உழைப்பின்மீதும் சமூக இருப்பு ஆதாரப்பட்டிருந்தது.
மனிதன் தனது உழைப்பால் பண்டைக் கருவிகளை அபிவிருத்தி செய்து கொண்டான். புதிய கருவிகளைப் புனைந்தான். இவற்றால் மேலும் திறமையாகத் தன் உழைப்பை வழிப்படுத்தினான். உற்பத்தி அதிகமாயிற்று. சமூக வாழ்க்கைக்குத் தேவையானது போக பொருள்கள் மிஞ்சின. இதனை மார்க்சீயவாதிகள் உபரிப்பொருள் (Surplus product) என்று அழைக்கிறார்கள். முந்திய இனக்குழு சமூகத்தில் எல்லோரும், எல்லா வகையான உழைப்பிலும் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவனே வேட்டையாடி விலங்குகளைக் கொன்று குழுவிற்கு உணவு கொணர்ந்தான். அவற்றின் தோலை உரித்துப் பதனிட்டு உடைகள் தைத்தான். சிறு குடிசைகள் கட்டினான். பண்டைய விவசாயம் செய்தான். தெய்வங்களை நினைத்து வாழ்க்கையில் செழிப்பை வேண்டிக் கொண்டு ஆடிப்பாடினான். எல்லோரும், எல்லாத் தொழில்களையும் செய்தார்கள். ஆட்டம், பாட்டு முதலிய கலைகளில் எல்லோருமே கலைஞர்களாகவும், ரசிகர்களாகவும் பங்கு கொண்டனர்.
மாறிய நிலைமையில், தொழில் பிரிவுகள் தோன்றின. கைத்தொழில் வல்லவர்கள் செய்யும் தொழிலால், தொழிற் பிரிவுகளாகப் பிரிந்தனர். விவசாயம், கைத்தொழில்கள் வளர்ந்தன. கைத்தொழில்கள் மிகப் பல தோன்றின. இவர்களையே ‘வினைவலார்’ என்று பண்டைய தமிழ் நூல்கள் அழைக்கின்றன. தொழிற் பிரிவு, உற்பத்திச் சக்திகளை வளர்க்கக் காரணமாயிற்று.
இந்நிலைமை குறித்து எங்கல்ஸ், “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்னும் நூலில் எழுதினார்: “தொழில் பிரிவுகள், தொழிற் திறமையையும், உற்பத்தித் திறமையையும் வளர்த்தன. தொழில் நுணுக்கம் முன்னேற்றம் கண்டது. இதனால் சமூகத்தில் ‘உற்பத்தி செய்பவர்கள்’, ‘உற்பத்தியை அமைப்