22
இந்தி எதிர்ப்பு ஏன்?
குள்ளே தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளலாம்’ என்று வாதாடுகின்ற பண்டித நேருவினுடைய பேரப்பிள்ளைகள் ‘எங்கே படிக்கிறார்கள்?’ என்று கேட்கிறேன். இன்றையத் தினம், இந்திப் பள்ளிக்கூடத்திலா படிக்கின்றார்கள்?.... இல்லை. சுவிட்சர்லாந்து நாட்டிலே படித்துக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய பெரிய காங்கிரஸ் தலைவர்கள் நியாயப்படி பணம் கிடைத்தால் இங்கே படிக்க வைக்கின்றார்கள். அநியாயத்திலே பணம் கிடைத்தால் உடனே பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்புகின்றார்களே தவிர, இந்தி ‘ராஷ்ட்ர பாஷா’ பள்ளிக்கூடத்திலா படிக்க வைக்கின்றார்கள் – அவரவர் ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு எந்த மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதற்கு உலகமெல்லாம் சுற்றி அலைகின்றார்கள். நம்முடைய நாட்டு மக்களுடைய தலையிலே தான் இந்தியைத் திணிக்க வைக்கின்றார்களே தவிர, அவர்கள் ஒன்றும் இந்தியிடத்திலே அவ்வளவு அக்கறை எடுத்திருக்கின்றார்கள் என்று அர்த்தமல்ல. ஆகையினாலே இந்த மாநாட்டிலே நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டியதும், நாம் திட்டம் தீட்டிக்கொள்ள வேண்டியதும் இந்தி மொழி அந்த முறையிலே புகுத்தப்பட்டால் — திணிக்கப்பட்டால் எந்த முறையிலே அதை எதிர்க்க வேண்டும்? எந்த முறையிலே அந்த இக்கட்டிலேயிருந்து விடுபடவேண்டும்? அப்படி விடுபடுகின்ற கிளர்ச்சி நடைபெறுகின்ற நேரத்தில் உங்களிலே எத்தனை பேர் ஈடுபாடு கொள்ள இருக்கிறீர்கள்? இன்றையத்தினம் சித்தமாக இருக்கின்றீர்கள் என்பதுதான்.
“மாநாட்டிலே உட்காருகின்ற நேரத்தில் ஆயிரம்பேர் சித்தமாயிருக்கலாம். – மாநாடு கலைந்து வெளியே செல்லுகின்ற நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தவுடன் ஆயிரம் பேரிலே ஐநூறு பேர் கலைந்து போகலாம்: இருநூறு பேரிலே போராட்டம் என்று வருகின்ற நேரத்தில் இருபதுபேர் மிஞ்சலாம்: மற்றவர் போய்விடக்கூடும் – அந்தக் கணக்கை நான் அறியாதவனல்ல.