உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

21


விடுதலை வேட்கையை – விடுதலை உணர்ச்சியை தமிழ் நாட்டு மக்கள் மட்டும்தான் இன்றையத் தினம் முழு அளவிலே பெற்றிருக்கின்றார்கள். என்னுடைய நண்பர்களிலே பல பேர் வங்காளத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்; மராட்டியத்தைப் பற்றி எடுத்துப் பேசினார்கள்; பாஞ்சாலத்தை எடுத்துச் சொன்னார்கள். அங்கேயெல்லாம் வீர உணர்ச்சியுள்ள மக்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்; மறுக்கவில்லை. அங்கே அறிவாளிகள் நம்மைவிட அதிகம் பேர் இருக்கக்கூடும்; அதைப் பற்றி நான் ஐயப்படவில்லை. ஆனால் தமிழ் மொழி நமக்கு அளிக்கின்ற விடுதலை வேட்கையை வங்காள மொழியும் வங்காளிக்கு அளித்திருக்காது, பஞ்சாபி மொழியும் பஞ்சாபிகளுக்கு அளித்திருக்காது. அப்படிப்பட்ட விடுதலை வேட்கையை தமிழ்மொழி தமிழர்களுக்கு அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ் மொழியை அழித்தால், விடுதலை வேட்கை அழிந்துவிடும். விடுதலை வேட்கை அழிந்துபட்டால் வடநாட்டு ஆதிக்கம் தமிழகத்திலே பூரணமாகிவிடும். அதற்குப் பிறகு திராவிடநாடு பிரிவினை என்ற பேச்சுக்கெல்லாம் இடமிருக்காது! – என்ற சதித் திட்டத்திலே இது விளைந்ததே தவிர வேறு இதற்குக் காரணம் இருப்பதாக என்னாலே யூகித்துக் கொள்ள முடியவில்லை. வேறு ஏதாவது தகுந்த காரணங்கள் இருக்குமானால், எனக்குப் பதிலளிக்க காங்கிரஸ் அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர்களும் கடமைப்பட்டிருக்கின்றார்கள்: அவர்கள் சொல்லுகின்ற பதிலைக் கேட்பதற்கு நாங்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றோம்.

“இந்தி மொழியிலே வளமில்லையென்பதை நம்முடைய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சொன்ன நேரத்தில் – தமிழ்மொழியினுடை வல்லமைகளையெல்லாம் நம்முடைய நண்பர்கள் எடுத்துச் சொன்ன நேரத்தில் – ஆங்கிலத்தைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்: ஆங்கிலம் இருந்தால் உலகத் தொடர்புக்குப் போதுமென்று, ‘இந்தி மொழியினாலே உலகத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளலாம் மாநிலங்களுக்-