உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

27


“பேரீச்சம்பழக் கடைக்காரனிடம் சென்று, ‘பேரீச்சம் பழம் உடலுக்கு நல்லதா? என்று கேட்டால், என்ன பதில் சொல்லுவான்? ‘ஆப்பிள் பழத்திற்கு இல்லாத சில தனித் தன்மைகள் இதற்கு உண்டு. மலைவாழைப்பழம் 10 சாப்பிடுவதும் சரி, 1 துண்டு பேரீச்சம்பழம் சாப்பிடுவதும் சரி என்று தன்னுடைய சரக்கு விற்பனையாவதற்காகப் பேரீச்சம்பழம் கடைக்காரன் அவ்வாறெல்லாம் சொல்லுவான். அதைப்போல, ‘இந்தி நன்மையானதா – கேடு பயப்பதா? அல்லது இந்தி வேண்டுமா – வேண்டாமா? என்பதை, இந்தி பேசுபவர்களைக் கேட்டுப் பயன் என்ன?

“நான் நாட்டை ஆளுகின்ற காங்கிரஸ் சர்க்காரைக் கேட்கிறேன் – உங்களுக்கு உண்மையிலேயே ஆற்றலிருந்தால் – நம்பிக்கையிருந்தால் – தைரியம் இருந்தால், இந்தி வேண்டுமா – வேண்டாமா என்பதை, இந்தி பேசாத மக்களிடத்திலே ஓட்டெடுத்துக் காட்டுங்கள், வங்காளத்திலேயும் ஓட்டெடுங்கள் – மராட்டி நாட்டிலே ஓட்டெடுங்கள் – தமிழகத்திலே ஒட்டெடுங்கள் – கேரளத்திலேயும் வாக்கெடுங்கள் – ஆந்திரத்திலேயும் வாக்கு எடுங்கள்!

இந்தியை புகுத்த வேண்டுமென்பதற்கான திட்டம் தீட்டிய நேரத்தில் – எந்த நேரத்திலே தீட்டினார்கள் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், தெரியும் – வெள்ளைக்காரன், இந்திய சுதந்திரத்தைக் காங்கிரஸ்காரர்களிடத்திலே கொடுத்து விட்டு, ‘நீங்கள் எக்கேடோ கெட்டுப்போங்கள்? நான் கப்பலேறிச் சீமைக்குச் செல்லுகின்றேன்’ என்று சென்றுவிட்ட நேரத்தில் – இவர்கள் உட்கார்ந்து ஒரு அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்தினார்கள்.

இங்கே நாம் ஒரு மாநாட்டுக்காகக் கூடியிருக்கின்றோம், நம்மிலே 10 பேர் இங்கே உட்கார்ந்து, திருவண்ணாமலையில் இன்னின்ன தெருக்கள் இப்படியிருக்க வேண்டும் – இன்னின்ன வீடுகள் இடித்துத் தள்ளப்பட வேண்டும் – இன்னின்ன