உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

29


எவ்வளவு கோடிக்கணக்கிலே பணம் சேர்க்கலாம்’ என்பதைக் கணக்கிடுவதற்குக் கூட்டப்பட்டது அரசியல் நிர்ணயசபை; அதிலேபோய், எங்களுடைய வீட்டுப் பெண்ணுக்குப் பிள்ளை பார்ப்பதுபோல எங்களுடைய நாட்டுக்கு இந்தி மொழியைத் திணிப்பதென தீர்மானம் போடுவானேன்?

“மைனர் சொத்தை, கார்டியனாக இருப்பவர் விற்றால் மைனர் மேஜரானதும் வழக்குத் தொடுக்கிறான் அதைப்போலத் தமிழர்கள், 1947-ல் மைனர் சொத்தைப் போல் – மைனர்களைப் போல – இருந்த நேரம் அது; அந்த நேரத்தில் அரசியல் நிர்ணய சபைக்கு யார் யார் போனார்கள்? மக்களிடத்தில் ஓட்டு வாங்கிக் கொண்டு யாரும் போகவில்லை. அரசியல் நிர்ணய சபைக்கு – காங்கிரஸ் ஆதிக்கமிருந்த காரணத்தினாலே ‘கந்தா வா, முருகா வா, கடம்பா வா, கச்சி ஏகம்பா வா, நீங்கள் அத்தனைப் பேரும் வாருங்கள்; பேசத் தெரிந்தவர்கள் 2 பேர் வாருங்கள்; பேசத் தெரியாதவர்கள் 7 பேர் வாருங்கள்; எதிர்க்கக்கூடியவர்கள் ஒருவர் இருவர் போதும்; எதிர்க்கத் தெரியாதவர்கள் 20 பேர் வாருங்கள்; உங்களுக்கேற்ற கட்டணம் தரப்படும்’ என்று அழைத்துச் செல்லப்பட்டு கூட்டப்பட்ட – ஒரு அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையிலே, நீ ஒரு நாட்டினுடைய மானத்தை – ஒரு இனத்தினுடைய நல்வாழ்வை – ஒரு மொழியினுடைய வளத்தை – ஒரு மக்களுடைய விடுதலை உணர்ச்சியை – இவைகளையெல்லாம் பாதிக்கக்கூடிய மொழிப்பிரச்சினையிலே நீ எப்படித் தீர்ப்பளிக்கலாம்? அளித்தத் தீர்ப்புக்கும் – என்னுடைய நண்பர்கள் எனக்குக் காட்டுகிறார்கள் – ஒரே ஒரு ஓட்டு தான் மெஜாரிட்டி கிடைத்தது. இந்தியை தேசீய மொழியாக வைக்கலாமா, வேண்டாமா என்றால், 40 பேர் வேண்டும் என்றால், 39 பேர் வேண்டாம் என்றார்கள். 40-39: அது அல்ல கணக்கு.

“உதாரணத்துக்குச் சொல்லுகின்றேன் – ஒரே ஒரு மெஜாரிட்டியிலேதான், நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதுவா, நம்முடைய எண்ணங்களையும், நம்முடைய எதிர்க்-