அறிஞர் அண்ணா
31
நொண்டியாக இருந்து சாய்ந்து சாய்ந்து வந்தால், மணப்பெண் கண்கலங்கி, ‘என்ன, ஒரு கால் இழுத்திருக்கும்போல் இருக்கிறதே’ என்று தோழியிடத்திலே சொன்னால், ‘இல்லை வாழைப்பழத்தோலை மிதித்தார்’ என்று பொய் பேசி, கழுத்திலே தாலி கட்டியதைப்போல, நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் – தமிழர்கள் ஏமாந்திருந்த நேரத்தில் – உலகமெல்லாம் உன்னைக் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில் – சனநாயகம் வளராத நேரத்தில் – எங்கள் தம்பி சம்பத் பார்லிமெண்டில் இல்லாத நேரத்தில் – நாங்களெல்லாம் சட்ட சபையிலே இல்லாத நேரத்தில் – தூங்குகின்ற நேரத்தில் உள்ளே நுழைந்த கள்வனைப் போல் நீ இந்தியைப் புகுத்தியிருக்கிறாய்; இப்பொழுது ஆண்மையிருந்தால் ஓட்டு எடு – இந்தி திணிக்கப்பட வேண்டுமென்று இந்தி பேசாத மக்கள் பகுதியிலே உனக்கு வக்கு இருந்தால் – வல்லமையிருந்தால் ஓட்டு எடு’.
“காமராசருக்கு நல்ல வேளையாக பிள்ளை இல்லை. ஆகையால், அந்த வீட்டில் எனக்கு ஓட்டு கிடைக்காது. பக்தவச்சலம் வீட்டிலேயே எனக்கு ஓட்டு உண்டு. அவர் வீட்டுப் பிள்ளைகள் எனக்குத்தான் ஓட்டுப் போடுவார்களே தவிர, பக்தவச்சலத்துக்கு ஓட்டுப் போடமாட்டார்கள்; அந்த அளவுக்கு இந்தி வெறியைப் பற்றியும், இந்தி வெறியோடு தொடர்புகொண்ட வடநாட்டு ஆதிக்கவெறியைப் பற்றியும், தமிழ் நாட்டு மக்கள் மிகத் தெளிவாக இன்றையத்தினம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
“மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே அவர்கள் இவ்வளவு துணிச்சலோடு வருகிறார்கள் என்றால்? தூங்குகின்ற நேரத்தில் நுழைகின்ற கள்ளன் தந்திரக்காரன் என்று பொருள்; விழித்துக் கொண்டிருக்கிற நேரத்திலே கள்ளன் வருகிறான் என்றால், அவனுடைய மடியிலே கூரான கத்தி இருக்கிறது என்று பொருள். அந்தக் கூரானக் கத்தி என்ன — தமிழர்களைப் பிளவுபடுத்துகின்ற கத்தி!