உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 'இந்து' தேசியம் அரசியல் நிறுவனத்திற்குள்ளும் பெரியாரின் சிந்தனைகள் சமூகக் சீர்திருத்தத்தையே சுற்றி வந்தன. 1924-இல் பெரியார் தமிழ்நாடு கதர் வாரியத்தின் (Board) தலைவரும் ஆனார். எடுத்துக் கொண்ட பணியினைத் தூங்காது செய்யும் ஊக்கமும் சிக்கனமும் எளிமையும் தைரியமும் கறை படியாத கரங்களும் பெரியாரின் சிறப்பியல்புகள் ஆகும். தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் காங்கிரசு இயக்கத்தைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து பாதுகாத்துக் கொள்வதை அவர் கண்கூடாகக் கண்டார். வ.உ.சிதம்பரம் (பிள்ளை) போன்ற மூத்த காங்கிரசு விடுதலை வீரர்கள் காங்கிரசால் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டார். காந்தியின் தலைமை காங்கிரசை சனாதன தர்மநெறிக்கு மாற்றுவதையும் அவரால் கண்டுணர முடிந்தது. 1920 முதலாக 1925 வரை காங்கிரசின் எல்லா அரங்குகளிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்? காங்கிரசு இயக்கம் பெரியாரைக் கொள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தத்தளித்தது. 1925-இல் காஞ்சிபுரத்தில் காங்கிரசு அரசியல் மாநாடு கூடியது. மாநாட்டின் தலைவர் திரு.வி.க. வழக்கம்போல் பெரியார் இந்த மாநாட்டிலும் எல்லா அரசியல் அரங்குகளிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அற்பமான சில விதிமுறைகளைக் காட்டி பெரியாரின் தீர்மானத்தைத் தலைவர் திரு.வி.க. தள்ளுபடி செய்தார். திரு.வி.க.வை முன் நிறுத்திய காங்கிரசு பார்ப்பன ஆதிக்கச் சக்திகளைப் பெரியார் சரியாகவே புரிந்து கொண்டார். அந்த மாநாட்டிலேயே, 'காங்கிரசை ஒழிப்பது தான் இனி என் வேலை', என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு வெளியேறினார். அப்போதும் கூடக் காந்தியைப் பெரியார் எதிர்க்கவில்லை. 1928-இல் காந்தி. தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். அப்போது அவர் வெளிப்படையாகப் பார்ப்பனர்களையும் சனாதன தர்மத்தையும் ஆதரித்துப் பேசினார். இப்பேச்சு பெரியாரை மிகுந்த ஏமாற்றமடையச் செய்தது. இந்தக் காலகட்டத்தில் பெரியாரோடு நெருங்கிப் பழகியவர் தமிழ்நாட்டுப் பொதுவுடைமை இயக்க மூலவரான சிங்காரவேலர் ஆவர். எஸ்.இராமநாதனோடு பெரியார் 1931-32இல் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சுற்றினார். அன்றைய இரும்புத் திரை நாடான இரஷ்யாவுக்கும் சென்று வந்தார். ஆனால் பெரியார் இரஷ்யா செல்வதற்கு முன்பே பொதுவுடைமை அறிக்கை, பொதுவுடைமை நூல்கள் முதலியவற்றை தனது குடி அரசு இதழில் மொழி பெயர்த்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 1929-ஆம் ஆண்டிலேயே சமதர்மம், நாத்திகக் கருத்துக்களையும் பெரியார் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/101&oldid=1669787" இலிருந்து மீள்விக்கப்பட்டது