________________
தொ.பரமசிவன் 121 சிறிது நாட்கள் பொறுத்து இருந்து விட்டு அதே ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் டாக்டர் அம்பேத்கார் ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையின் தமிழாக்கம் 10.04.1932இல் குடியரசு இதழில் வெளியாகிறது. திரு.ராஜாவோடு உடன்படிக்கை செய்து கொள்வதற்கு முன்பு டாக்டர் மூஞ்சே என்னோடு முதலில் விவகாரம் ஆரம்பித்தார். புது | டெல்லியில் மூன்று நாட்களாக நாங்கள் இதைப்பற்றி விவாதித்தோம். பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் 3ஆம் தேதி மட்டும் எங்களுடைய தர்க்கவாதம் நடந்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு ஐந்து வருடகாலத்திற்கு மட்டும் தனித்தொகுதி கொடுக்கலாமென்று டாக்டர் மூஞ்சே கூறினார் நான் அதை ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் எங்களுடைய விவகாரம் முறிந்தது. அந்த சமயத்தில் டாக்டருக்கு திரு.ராஜாவைப் பற்றிய ஞாபகமே இருந்ததில்லை. திரு.ராஜா தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் அதிகாரம் பெற்ற பிரதிநிதியென்று அவர் அந்தக் காலத்தில் நினைத்திருக்கவில்லை.13 இதற்கிடையில் நடந்த இன்னொரு விசயத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அகமதாபத்தில் All India Depressed People Federation (அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு) என்ற பெயரில் ஒரு மாநாட்டை காங்கிரசு இயக்கத்தினர் பண்டித மதன்மோகன்மாளவியாவின் தூண்டுதலின் பேரில் நடத்தினர். இந்த மாநாட்டின் முன்னணித் தலைவராக எம்.சி.ராஜா அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த மாநாட்டிற்குத் தமிழ் நாட்டிலிருந்து தாழ்த்தப்பட்டோர் தலைவர்களான என்.சிவராஜ் (பின்னாளில் சென்னை மேயர்) தர்மலிங்கம் பிள்ளை ஆகியோரை அனுப்பி வைப்பதில் காங்கிரசு இயக்கத்தினர் பெருமுயற்சி எடுத்தனர். என்.சிவராஜின் வகுப்புத் தோழரான ஆந்திர தலைவர் டி.பிரகாசாவைக் கொண்டு அவரை மனம் மாற்றினர். எம்.சி.ராஜாவின் நண்பரான வரதாச்சாரியார் தன்னுடைய மற்றுமொரு நண்பர் தர்மலிங்கம் பிள்ளையை மனம் மாற வைத்தார். இந்தத் திரைமறைவுச் செய்தியை வெளிப்படுத்தும் யூஜின் இர்சிக் இதற்கு ஆதாரமாக அரசு ஆவணங்களையே முன் வைக்கிறார். 14 இரண்டாம் வட்டமேசை மாநாட்டின் முடிவுகள் விரைவில் பிரிட்டன் பிரதமரால் அறிவிக்கப்படும் சூழ்நிலை உருவாகியது. 1932 ஜூலையில் (10.07.1932) பம்பாயில் காங்கிரசுக்கு ஆதரவாக தாழ்த்தப்பட்டோர் மாநாடு ஒன்று கூட்டப் பெறுகிறது. இந்த மாநாட்டில் அம்பேத்காரின் ஆதரவாளர்களுக்கும் எம்.சி.ராஜாவின் ஆதரவாளர்களுக்கும் (தனித்தொகுதி முறை வேண்டுபவர்களுக்கும், அதனை கைவிட்டவர்களுக்கும்) இடையே மோதல் நிகழ்கிறது.