உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 15

அடுத்துவரும் கட்டுரை 'புனா ஒப்பந்தம் : ஒரு சோகக்கதை' என்பதாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கும், வளர்ச்சிக்கும், பொதுஅவைகளில் தங்கள் கருத்தை எடுத்து வைப்பதற்குமான பல முயற்சிகள் பல காலமாக செய்யப்பட்டே வந்துள்ளன. அவற்றுள் சிறந்த ஒரு முயற்சியே 'இரட்டை வாக்குரிமை தனித்தொகுதி' கேட்டதாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக அரசியல் நிர்ணய சட்டத்தில் உரிய ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என 1919ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்திற்கு முந்திய மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை கூறி இருந்தது. 1919ஆம் ஆண்டின் இந்திய சட்டத்தின் காப்பு வாசகத்தின்படி சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு ஆய்வுக்குழு (இராயல் கமிஷன்) 1928இல் அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் அனைவருமே ஆங்கிலேயர்கள்; இந்தியர் ஒருவர்கூட இல்லை என்பது போன்ற காரணங்களைக் கூறி
காங்கிரசும், பார்ப்பனர்களும் புறக்கணித்தனர். அவர்களது ஏமாற்றுப் பரப்புரைகளை நம்பி பார்ப்பனரல்லாதோர் கட்சியான நீதிக்கட்சி உட்பட எல்லா அமைப்புகளுமே எதிர்த்தன. அம்பேத்கார். பெரியார் எனும் இரு தலைவர்கள் மட்டுமே வரவேற்றனர். பெரியாரின் இடித்துரைக்குப் பின்னால் நீதிக் கட்சியும் அக்குழுவை வரவேற்றதோடு அவர்களுக்கு முன்னால் சாட்சியமும் அளித்தனர்.
இந்திய உறுப்பினர் யாரும் இல்லையே என்று கூறியவர்களுக்கு, "இந்திய உறுப்பினர் எனில் ஒரு பார்ப்பனர்தான் நியமிக்கப்பட்டிருப்பார்; அது நம் கோரிக்கைக்கு பாதிப்பாகத்தான் போகும். எனவே பார்ப்பனர் எவரும் இல்லையெனில் நமது கோரிக்கை நடுநிலையோடு ஆயப்படும். எனவே இந்தியர் எவரும் இல்லையென்பதற்காகவே இதை நாம் வரவேற்க வேண்டும் " என்றார் பெரியார்.
இவ்வாறான ஆய்வுக்குழு வருவதற்கு முன்னதாகவே பெரியாரும், அவரது இயக்கமும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
18-4-1926லேயே குடிஅரசு இதழிலில் பஞ்சமருக்கு தனித் தொகுதி வகுத்து,தேர்தல் முறையை அளிக்கவேண்டும் என்றும், 25-7-1926 குடிஅரசு தலையங்கத்தில் தொழிலாளர்களுக் கென்றோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கு அந்தந்த பிரிவார் கொண்ட ஓட்டர் தொகுதியில்லாத வரையில் தற்காலத் தேர்தலைவிட நியமனம் அத்தனை மோசமானதல்ல என்பதே நமது அபிப்பிராயம்” என்றும் பெரியார் கூறிவந்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/16&oldid=1674018" இலிருந்து மீள்விக்கப்பட்டது