உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 'இந்து' தேசியம்

அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டு போகவில்லை. பின்னாலே அவர்கள் அறிந்திருக்கலாம். அது வேறு விசயம். போகிறபொழுது இயேசுவின் செய்தி அவர்களுக்குத் தெரியாது. இப்படித்தான் எல்லா இடத்திலும் நிகழ்ந்தது. வடநாட்டு ஆசிரியர்கள் எல்லாம் எழுதி வைத்து இருக்கிறார்கள். இஸ்லாம் வாளோடு வந்த மதம் என்று. எந்த மதம் வாளைத் தூக்கவில்லை? எல்லா மதங்களும் வாளைத் தூக்கியவைதான். சிலுவைப்போர்கள் நடந்ததும் உண்மைதான். கலிபாக்கள் இடையில் போர் நடந்ததும் உண்மைதான். மதுரையிலே எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றியதும் உண்மைதான்.
உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எல்லா மதங்களுமே ஒரு கட்டத்தில் ஆயுதத்தை ஏந்தி அடுத்த மதத்தை ஒடுக்கிய, மதங்கள்தான். இன்றைக்குத்தான், 'அவரவர் மதம் அவரவர்களுக்கு” என்கிற ஞானம் எல்லா மதத்துக்காரர்களுக்கும் வந்துள்ளது. சாதி ஆதிக்கமும் பொருளாதார ஆதிக்கமும், அரசியல் அதிகார ஆதிக்கமும், பலமும் உடையவர்களாலே கிறிஸ்தவர்களும், இசுலாமியர்களும் விரட்டப்பட்டார்கள் என்பதுதான் சரியானதாக இருக்கமுடியும். இங்கு அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். போன இடத்திலே அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை இவர்களுக்குப் பொறுக்கவில்லை.

தற்பொழுது இந்துக்களை மதமாற்றம் செய்வது திட்டமிட்ட சதி என்கிறார்களே?
இங்கு இருந்து விரட்டியதும் சாதியினாலே தாழ்ந்தவர்கள் என்பதும் திட்டமிட்ட சதியில்லையா? ஆம். சாத்திரங்களும் உயர் சாதிகளும் திட்டமிட்ட சதிதான். இன்னமும் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 160-க்குமேற்பட்ட சிற்றூர்களிலே தனித்தம்ளர் முறை இருக்கிறது. சாதி ரீதியான ஒடுக்குமுறை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலே வெவ்வேறு வடிவிலே வெவ்வேறு சாதி மக்களிடையே இருக்கிறது.
இதுவரைக்கும் இந்த நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களிடையே சாதிக் கணக்கு போட்டுப் பாருங்கள். எந்தக் கோயில் அவர்களைக் காப்பாற்ற முன் வந்தது? ஆற்றோரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், குடிசைகளிலும் வாழ்கிற மக்களை சாதி ரீதியாக கணக்கெடுத்துப் பாருங்கள். இவர்களிலே பெரும்பாலோர் மரபு வழியாக ஆன்மீக அதிகாரத்தால் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/33&oldid=1676060" இலிருந்து மீள்விக்கப்பட்டது