உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 'இந்து' தேசியம்

பெற்றது. அந்த ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேர்களில் 13 பேர் பார்ப்பனர்களாக இருந்தனர். இதுவே இதனை விளக்கப் போதுமான சான்றாகும்.
இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பார்ப்பன சக்திகளின் நிலை எவ்வாறு இருந்தது என்று பார்க்க வேண்டும். சர்.சி.பி.இராமசாமி ஐயர் தலைமையில் மயிலாப்பூர் கோஷ்டி என்று ஒன்று அரசியல் தலைமைக்கு(கவர்னருக்கு) நெருக்கமாக இருந்தது. மயிலாப்பூர் கோஷ்டியில் பெரும்பாலும் பார்ப்பன வக்கீல்களே இருந்தனர். அரசியல் தலைமையைப் பெரும்பாலும் அனுசரித்துப் போகும் போக்கு இவர்களிடம் இருந்தது. இந்த கோஷ்டியினரைத்தான் பாரதி 'மயிலாப்பூர் வக்கீல்கள்' என்றும் தன்னுடைய கவிதையில் 'அந்தகர்' என்றும் ‘அலிகள்' என்றும் சாடித் தீர்க்கின்றான். இந்த நேரத்தில் தான் சேலத்து வக்கீல் இராஜகோபாலாச்சாரியார் சென்னைக்கு வந்து மயிலாப்பூர் கோஷ்டியின் பக்கம் சாய்கிறார். பிறகு தேசபக்தன் பத்திரிகை நடத்திய திரு.வி.க.வைத் தன்னுடைய ஆதரவாளராக அவர் வளைத்துக் கொண்டார்.
பார்ப்பனியத்தின் பலமான அம்சங்களில் ஒன்று அவர்கள் தங்கள் சார்பில் பேசப் பார்ப்பனர் அல்லாத அடிமைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான். தமிழகச் சமூக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க, Non-Brahmin Manifesto (1916) என்று அழைக்கப்படும் பிராமணரால்லாதார் அறிக்கையினை உடனடியாக எதிர்த்தவர்கள் குத்திகேசவ பிள்ளையும் ஐரிஷ் பிராமணியான அன்னி பெசன்டு அம்மையாரும் தான். எனவே தான் இன்றளவும் பள்ளிப் பிள்ளைகளுக்கான வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அன்னிபெசன்ட் பற்றியதான செய்திகள் உயர்வாக இடம் பெறுகின்றன.
1920 -களின் தொடக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக டி.வெங்கடராம ஐயர் இருந்த போது கீழ்க்காணுவோர் மாவட்டக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக இருந்தனர். மதுரை வைத்தியநாத ஐயர், திருச்சி - சாமிநாதையர், தஞ்சாவூர் - பந்துலு ஐயர், திருநெல்வேலி - மகாதேவ ஐயர், கோயமுத்தூர் என்.எஸ். இராமசாமி ஐயர், சேலம் ராமராவ், வட ஆற்காடு - சுப்பிரமணிய சாஸ்திரி, சென்னை - ராமசாமி ஐயங்கார்.
1922-இல் வ.வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர் என்ற வ.வே.சு. ஐயர் 1922-இல் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 'இந்து தர்மத்தை மீட்டெடுக்க' ஒரு குருகுலத்தைத் தொடங்கினார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/89&oldid=1716019" இலிருந்து மீள்விக்கப்பட்டது