உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 'இந்து' தேசியம் 1967 தேர்தலில் வென்ற தி.மு.க பெரியாரோடு தன் உறவைப் புதுப்பித்துக் கொண்டது. எனவே, ராஜாஜி தி.மு.க.வை வீழ்த்த 1971-இல் தன் அரசியல் எதிரியான காமராசரோடு தேர்தல் கூட்டணி அமைத்தார். அந்தக் கூட்டணி தேர்தலில் தோல்வி கண்டது. 1972 இல் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுப் பிரிந்த போது ராஜாஜி அவருக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்தார். 1972-இல் காலமானார். ராஜாஜியின் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கித் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் சில உண்டு. ராஜாஜி ஜனநாயகத்தில் அழுத்தமான நம்பிக்கையுடையவர் அல்லர். இளவயதில் சேலம் நகரசபைத் தேர்தலில் வென்றதைத் தவிர வேறு எந்தத் தேர்தலிலும் அவர் நின்றதே கிடையாது. ஆனால் நாட்டு விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்தியாவின் பெரும் பதவிகளையெல்லாம் அவர் வகித்தார். தன் கை தளரும் போதெல்லாம் காங்கிரசை விட்டு ஒதுங்குவது அல்லது விலகுவது, பின்னர் பதவிக்காகக் கட்சிக்குள் வருவது என்பதனை அவர் திரும்பத் திரும்பச் செய்தார். இந்தியைத் தமிழ்நாட்டில் அதிகாரப் பூர்வமாக நுழைத்தது, குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தது. 1971 தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்தது ஆகிய அவரது அனைத்து நடவடிக்கைகளுமே பார்ப்பனர்களின் நலனை முன்னிறுத்தியதேயாகும். இருபதாம் நூற்றாண்டின் பத்திரிகைத் துறையின் வலிமையினை வேறு எந்த அரசியல்வாதிகளையும் விட முன்னதாகவே அறிந்துகொண்ட கூர்த்த மதியாளர் அவர். தொடக்கக் காலத்தில் நவசக்தி,தேசபக்தன், பின்னர் ஆனந்த விகடன், கல்கி ஆகிய பத்திரிகைகளையும் அவர் வளைத்துக் கொண்டார். தன்னுடைய ஆஸ்தான எழுத்தாளராகக் கல்கி கிருஷ்ணமூர்த்தியை வைத்துக் கொண்டார். ராஜாஜி இருக்கும் வரை தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரை எப்பொழுதும் விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஞானியாகவும் உத்தமராகவும் சித்தரித்தன. திராவிட நாட்டுக் கொள்கையை அண்ணா கைவிட்ட போது அவரைக் கொள்கையிலே பல்டியடித்தவர் எனப் பேசினார்கள், எழுதினார்கள். ஆனால் 1937-இல் காங்கிரசு கட்சிக்குக் கூட விருப்பமில்லாமல் தன் விருப்பத்தின் பேரில் கட்டாய இந்தியைக் கொண்டு வந்து எதிர்ப்பினையும் தோல்வியையும் சந்தித்த ராஜாஜி 1957-இல் 'ஒரு போதும் இந்தி வேண்டாம்' என்றார். அவர் கொள்கையில் பல்டியடித்தவராக எந்தப் பத்திரிகையும் பேசவும் இல்லை; எழுதவும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/99&oldid=1669785" இலிருந்து மீள்விக்கப்பட்டது