பக்கம்:இன்னொரு உரிமை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170சு. சமுத்திரம்

விடலைப்பையன்கள், பீடிகளை இரண்டு இரண்டாகச் சேர்த்து லேபிலை எடுத்து ஒட்டினார்கள். ‘தார்சாவில்’ ஒரு பயல் எழலைக் கிழங்கு மாவையும், கடலைமாவையும் அடுப்பில் வைத்துக் காய்த்துப் பசையாக்கிக்கொண்டிருந்தான். உள்ளே கடைசியில் இருந்த அறையில் ஏஜெண்டிடம் தலையைக் காட்டிவிட்டு அதற்கு அடுத்தாற்போல் இருந்த அறையில், தராசும் கையுமாக இருந்த கணக்குப் பிள்ளையிடம் தோழிகள், சீனியம்மையைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவன் அவர்களைக் கண்டுக்காமல் பீடி இலைகளை எடைபோடும் ஒருவனைப் பார்த்து “எச்சிஇல எடுக்க வேண்டியவன் எல்லாம் எதுக்குடா பீடி இலகிட்ட வாரிய! இலத்தட்டு கீழ போவுது. ஒன் பெரியப்பா மகள்னா, இப்படியா ஒரேடியா?” என்று கத்தினான். அவன் முன்னால் நின்ற பெண், “அண்ணாச்சி... ராமன் இவளவு பீடியயும் கழிச்சிட்டான்” என்று கத்த, அவள், ‘அண்ணாச்சி’ என்று சொன்னதில் அதிர்ந்துபோன கணக்குப்பிள்ளை, ‘இவளாவது தேறுறாளான்னு பாப்போம்’ என்பதுமாதிரி சீனியம்மையைப் பார்த்தான். வச்சிக்கிடலாம்...

சீனியம்மைக்கு ஒரு வாரத்திற்குரிய இலையும், அதற்குப் போதுமான தூளும், தென்னை நாரும் கொடுக்கப்பட்டது. புதிதாக கல்லூரிக்குள் காலடி வைப்பவளைப் போல, முதல் தடவையாகத் தன் கதையைப் பத்திரிகையில் பார்க்கும் எழுத்தாளனைப் போல சீனியம்மை தன்னை நம்பாதவள் போல தன்னையே பார்த்துக்கொண்டாள். அவளுக்குக் கொடுத்திருந்த கணக்குப் புத்தகத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

ஒரு வாரம் ஓடியிருக்கும்.

சீனியம்மை, இதரப் பெண்களுடன் பீடிகளை ஒப்படைக்கப் போனாள். மொத்தம் 180 ‘வண்டல்கள்.’ கணக்குப்பிள்ளை பின்னால் வந்து அவளைத்தான் முதலாவதாகக் கூப்பிட்டான். “பீடின்னா இதுல்லா பீடி!” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/179&oldid=1369277" இலிருந்து மீள்விக்கப்பட்டது