பக்கம்:இன்னொரு உரிமை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதை இல்லாத நாயகி 195

அவள் மனத்திரைக்குக் கீழே லட்சோப லட்சம் மக்கள் மூச்சையடக்கியதுபோல், அசைவற்று அவளைப் பார்க்கிறார்கள். அவள் அழும்போது சிரிக்காமலும். சிரிக்கும் போது அழாமலும் அவளாகவே மாறுகிறார்கள்.

இந்தத் திரை விலகி, இன்னொரு திரை வருகிறது.

அவள் ‘அவார்ட்’ வாங்குகிறாள். டி.வி.யில் பேட்டி கொடுக்கிறாள். செய்தியாளர்களிடம் பேசுகிறாள்.

மனத்திரையில் தெய்வங்களுக்குப் பதிலாக, தன்னையே வேறு வேறு ரூபங்களாக ஆராதித்தும், ரசிகர்களை பக்தர் களாக அனுமானித்தும் “அகமாகிப்போன” தமிழ்ச்செல்வி, கூட்டத்தில் சலசலப்புக் கேட்டு கண் திறக்கிறாள். சுற்றும் முற்றும் பார்க்கிறாள். ஒரு பிரபல நடிகையின் பிரவேசத்தால் கூட்டம் அமளிப்படுகிறது. கூடை சுமந்த தோழியோடு வந்த அந்த நடிகையை, செய்தியாளர்கள் சுற்றிக்கொள்கிறார்கள். நாட்டின் மிகப்பெரிய பிரச்னையான அவளது விவாகரத்து கிசுகிசுப்புப்பற்றி கேட்கப் போகிறார்கள். அவள், யார் கதாநாயகி என்று கேட்டிருக்க வேண்டும். இல்லையானால் அந்த நடிகையின் வாயையே பார்த்தவர்கள் தமிழ்ச்செல்வியை ஒட்டு மொத்தமாக அப்படிப் பார்த்திருக்க மாட்டார்கள்.

அந்தம்மா பார்த்த பார்வையில் தமிழ்ச்செல்வி பயந்து போகிறாள். கண்களை மூடுகிறாள். முன்பு தோன்றிய மனோ ‘பாவங்களை’ மூழ்கடித்து, தெய்வப்படங்களை உலா விடுகிறாள். இந்தப்படங்களும் மறைந்து இன்னொரு படம், ஒற்றை உருவமாய் வருகிறது. சந்திரனின் உருவம். ஆமாம், அவன்தான். அவனே தெய்வம். அல்லது இந்த தெய்வங்களின் மனித ரூபம். இந்தச் சந்திரனுக்கு ‘விட மாட்டோம்’ என்ற நாடகம் பல புரட்சி நாடகங்களில் ஒன்றுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/204&oldid=1369465" இலிருந்து மீள்விக்கப்பட்டது