பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. இனிதே!இனிதே!

பாடுவோம் வாராய்! பாடுவோம் வாராய்!
கோடுயர் மரத்திற் பாடுங்குயில்போற்
பாடுவோம் வாராய்! பாடுவோம் வாராய்!

வலக்கை இடக்கை உலக்கை மாற்றிச்
சலசலத் தோடும் அருவி தந்த
குலைச்செந் நெல்லைக் குற்றுவோம் வாராய்!

மாமழை வாழ்க! மாமழை வாழ்க!
மாமழைக் குயிர்தரும் ஞாயிறு வாழ்க!
காமர் நிலவும் கடலும் மலையும்
பாடுவோம் வாராய்! பாடுவோம் வாராய்!

அன்னம் நானும் மென்னடைப் பாவாய்!
பொன்செய் மேனி இன்சுவை அமிழ்தே!
நன்செய் விளைவே நகைமுக நிலவே!
இன்சொற் பாட்டொன் றியம்புக முன்னே!

கரும்புகை யொத்த பெரும்பெயல் ஓய்ந்தது!
கரும்பு விளைந்தது விளைந்தது கழனி!
அரும்பு புதரெலாம் அரும்பி மலர்ந்தது!
விருந்தே வாழ்க பெருந்தேன் மலையே!

நகுமே கேட்போர்! நகுமே தலைவி!
முகிலிடைப் பாயும் முழுநில வேயாம்
அகில்வளர் குன்றத் தமைந்த தேனடை
மிகுதொலை வுளதாம்! விளைவாற் பயனென்?