இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
இன்ப
காட்சி—1
திருநாட்டின்மீது போர்த்தொடுத்த வெண்ணாட்டை, வெற்றி கண்ட மகிழ்ச்சிச் செய்தியுடன் திருநாட்டுப் பாதுகாவலன் விக்கிரமன், பத்து வயதே நிரம்பிய மன்னன் குமார வேலன் அமர்ந்திருக்கும் அவைக்குள் நுழைகிறான், கெம்பீரமாக. வெற்றிச் செய்தியை விண் எட்ட முழக்கி, விழாவெடுத்துக் கொண்டிருக்கும் திருநாட்டு மக்கள் திரள்கிறார்கள் அங்கு. வெற்றி வீரர்களுக்கு வீரப்பதக்கங்களும், சிறப்புப் பட்டயங்களும் முன்னேற்பாடாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விக்ரமன் அவைக்குள் நுழைகிறான். வாழ்த்தொலிகள் வான் எட்டுகின்றன.
"வளமார் திருநாடு வாழ்க, வாழ்க!"
"வெண்ணாட்டை வெற்றி கண்ட வேந்தர் வாழ்க!"
"புல்லர்களைப் புறங்கண்ட புனிதர் வாழ்க!"
விக்ரமன்: (வந்துகொண்டே) வாழ்க திருநாடு! வாழ்க மன்னர்!
[குமாரவேலனின் அகமும் முகமும் மலர்கின்றன. முரசொலித்து ஓய்கிறது. சில வீரர்கள் ஒரு பெரும் பேழையைத் தூக்கிக்கொண்டு வந்து மன்னன் குமாரவேலன் முன் வைத்துவிட்டு நிற்கின்றனர். திருநாட்டுக்கும், மன்னன் குமார வேலனுக்குமே பாதுகாவலனான விக்ரமன் பேழையைத் திறந்து, அதனுள்ளிருந்த ஒரு வீரவாளை எடுத்து மன்னனின் காலடியில் வைத்துவிட்டு.....]
விக்ரமன்: அரசே! இதோ வெண்ணாட்டு வேந்தனின் வீரவாள், வெற்றி கண்ட தங்கள் தாளின் கீழ்!
[என்றதும் அவையில் இருந்த அனைவரும் மீண்டும். "வாழ்க மன்னர்!" "வாழ்க திருநாடு!" என்று முழங்கி ஓய்கின்றனர். அவை அடக்கமுற்றதும் குமாரவேலன் எழுந்து நிற்கிறான். அவையினரும் எழுந்து நிற்கின்றனர்.]