உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

11

குமாரவேலன்: வாழ்க பாதுகாவலர்! வாழ்க விக்ரமப் பூபதி!

[அவையும் அதை யொட்டி வாழ்த்துரைக்கிறது. குமாரவேலன் அமர்கிறான். அவையினரும் அமர்கின்றனர். விக்ரமன் மிகுந்த அடக்கத்துடன் அரசனையும், அவையினரையும் வணங்கிவிட்டு..]

விக்ர: வெற்றி பெற்றுவிட்டோம் வேந்தே! வெற்றி பெற்றோம். வீரத்தைப் பழித்து விளையாட வந்த வீணரை வென்றோம், உங்கள் ஆசியால்-உள்ளன்புடன் விடை தந்து வீரர்களை போர்முகத்துக்கு அனுப்பிய மக்களின் திருவருளால்! தோற்றோடிப் போனான், தொல்லைதர வந்தவன்! கட்டளையை நிறைவேற்றிவிட்டேன் காவலா! காதகர்கள் காடாக்கப் பார்த்தனர் நம் தாயகத்தை. கண்டனர் வீரர்கள்; கொண்டனர் விழிச்சிவப்பு. கண்டீரோ மன்னா, காலடியில் அந்தப் பேடியரின் வீரவாள்! நம் நாட்டை எதிர்த்திடத் துணிந்த தீயோனின் கொடுவாள்!

[வாளை எடுத்து மன்னன் கரத்தில் தரச்செல்கிறான். குமாரவேலன் தடுத்து...]

குமார: விக்ரமரே! வீர வெற்றியை விழாவெடுக்கிறதே திருநாடு! மகிழ்ச்சிக்குரிய இந்த வேளையில், அந்த மதோன்மத்தனின் வாளை, கோட்டை வாயிலில் கொலுவில் வையுங்கள்! கண்டவர்கள் காரி உமிழட்டும் இதன்மேல்! நாளைக்கு நம்மை எதிர்க்கத் துணிவோர்க்கும் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கட்டும் இந்த வாள்!

[மன்றத்தினர் இது கேட்டு மகிழ்ச்சி ஆரவாரம் புரிகின்றனர். பிறகு வேந்தன்...]

நன்றி! பாதுகாவலரே நன்றி. நாடு தங்கட்குக் கடமைப் பட்டிருக்கிறது. நாட்டைமீட்டுத் தந்ததற்காக! எந்தையின் புகழுக்கு ஏதும் களங்கமின்றி பெருமை சேர்த்தீர்! பெருமை அடைகிறேன். வீரர்கள் அனைவருக்கும் என் நன்றி.