உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

105

விக்: (குறுக்கிட்டு) அறிவானந்தரே! நாட்டுக்குப் பேராபத்து வந்துவிட்டது! மல்ல நாட்டுப் படைகள் எல்லையில் குவிந்து விட்டன! எந்த நேரத்திலும் அவைகள் திருநாட்டினுள் புகுந்துவிடலாம்! நாட்டைக் காக்கும் பெரும்பொறுப்பு நம்மிடமிருக்கிறது! நீங்கள் திருமுடியாரிடமிருந்து மக்களைக் காத்ததுபோல் இப்போதும் மல்ல நாட்டிடமிருந்து காப்பாற்ற வேண்டும்!

அறி: மல்ல நாடு நம்மீது படையெடுக்க அவர்களுக்கு நாமென்ன குற்றமிழைத்தோம்?

விக்: படையெடுப்புகளுக்குப் படைபலம் ஒன்று தவிரவேறெந்த காரணமும் கிடையாது! இப்பொழுது மல்ல நாட்டில் படை பலம் உயர்ந்திருக்கிறது! நாம் செய்த குற்றம், மல்ல நாட்டைவிடக் குறைந்த படையை வைத்திருப்பது தான்! கருவூலத்தை அளவுக்கதிகமாக ஆராய்ச்சித் துறைக்குப் பயன்படுத்திக் கொண்டோம்.

அறி: வெண்ணாடு பலமற்றதாயிருந்ததால், திருநாடு வெற்றி கண்டது! இப்பொழுது மல்லநாடு, திருநாட்டுக்கு அதே பாடத்தைப் படித்துக் காட்டப் போகிறது. போர்! அதன் பெயரால் எவ்வளவு உயிர்கள் பலியிடப்படப் போகின்றனர்! கை, கால் வெட்டப்படுதல், கட்டுடல் கண்டதுண்டமாக்கப்படுதல், தலைசிதறிக்கிடத்தல், குடல் சரிந்து விழுதல், இரத்தம் பீறிட்டு வழிதல்! இந்தக் கோரக் காட்சிகளைத் தான் போர் நமக்குத் தரப் போகிறது! போருக்குப்பின் பசி, பஞ்சம், பட்டினி, ஏழ்மை, தொத்து நோய், சூறாவளியென நாட்டில் பரவும்! போர் முனையில் பலியானவர்களைவிட அதிகமானோர் இறந்துபடுவர்! ஒரு போர் மற்றொரு போரைத் தூண்டுகிறது; இரத்தம் இரத்தத்தை விலை பேசுகிறது! வெற்றி தோல்வி—இவைகளை இரு கைகளாகக் கொண்டு சாவு கைகொட்டிச் சிரிக்கிறது. ஒரு வாள் ஒன்பது வாட்களை உண்டாக்குகிறது! ஒரு நாட்டின் வரலாறு போர்களின் வரலாறு ஆகிவிடுகிறது. சாவுகளின் வரலாறு ஆகிவிடுகிறது! அது கூடாது விக்ர பூபதி; வரலாறு, வாழ்வின் வரலாறாக வேண்டும்! மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். அமைதியில்