உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துளி

117

தள: அப்படியா! கார்மேகம் நினைத்தால், காற்றைக் கூட கையில் பிடிப்பார் என்று அரசர் கூறிக் கொண்டிருந்தது உண்மைதான் என்பதை உணர்கிறேன்! பேசிக்கொண்டே இருக்கிறோமே, நாசப் பொடியைக் காட்டுங்கள்; பார்க்கலாம்.

கார்: காட்டுகிறேன் தளபதியாரே! திருநாட்டின் திமிரையடக்கி, மல்ல நாட்டுக்கு மகத்தான வெற்றிதேடித் தரப் போகும் அதனைக் காட்டுகிறேன்! கண் குளிரப் பாருங்கள்! விழிகளைத் திறந்து வைத்துக் கொண்டு வியப்போடு பாருங்கள்! திருநாட்டு வீரர்களைத் திணறச் செய்யப்போகும் இரணப் பொடியைப் பாருங்கள்! பார்த்துப் பரவசப் பண்பாடுங்கள்!

[என்று கூறியபடியே கையில் கொண்டு வந்திருந்த ஒரு பெட்டியிலிருந்து ஒரு சிறு துணி மூட்டையை அவிழ்க்கிறான். சாம்பல் நிறத்தில் குங்குமம் கலந்தாற்போன்ற வண்ணத்தூள் இருக்கிறது. அதைக் காட்டி.... 'கையால் தொடக்கூடாது; கண்ணாடிக் கருவி கொண்டு தொடவேண்டும். தூரத்தில் நின்று வீசினாலே போதும், பட்டதும் பட்ட இடங்களில் எண்ணெய் கொதிப்பது போலக் கொப்பளங்கள் ஏற்படும். சாகும்வரை அவை ஆறாது. சாக்காட்டை விரைவாகத் தந்துவிடும்! திருநாட்டு வீரர்கள் பூண்டோடு ஒழியப் போகிறார்கள்!' என்று பெட்டியை மூடப் போகிறார். சட்டென்று நிறுத்திவிட்டு..அறிவானந்தர் தம்மிடம் இருக்கிறார் என்ற ஆணவத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது திருநாடு. தளபதியாரே! அறிவானந்தரையே இந்தப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டுகிறேன்! தெரிகிறதா!' என்று மூடுகிறார்.

தள: இருங்கள் கார்மேகம்! மூட வேண்டாம்!! பொடியைச் சோதித்துப் பார்க்க வேண்டாமா?