ஒளி
123
குணா: என்னால் உன்னைப் புரிந்து கொள்ள முடிகிறது மணிவண்ணா! தந்தையின் இலட்சியங்கள் உன்னைக் கவர்ந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் விக்ரமனுக்கு நமது உதவி கிடைக்கக் கூடாதென்று நீ கூறுவதன் பொருள் எனக்குப் புரிகிறது. மணிவண்ணா! என் உயிருக்குயிரான தங்கையின் கணவனாக வர இருப்பவன் நீ, அறிந்திருந்தும் நான் நினைப்பதைக் கூறிவிடுகிறேன்! நீ மல்ல நாட்டுக் குடிமகன்! விக்ரமனுக்கு உதவக் கூடாது என்பதன் மூலம், திருநாடு வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறாய்! மல்ல நாட்டுக்காக நீ வாதாடுகிறாய்!
மணி : ஐயோ, குணாளா! இவ்வளவு பெரிய பேரிடியை நீ போடுவாய் என்று எதிர்பார்க்கவில்லையே குணாளா!
குணா: உன் அண்ணன் கார்மேகம் மல்ல நாட்டு ஒற்றன் என்று தெரிந்த பிறகும் உன் மீது சந்தேகம் கொள்ளாமலிருந்தேன்! சந்தேகம் முளை விட்டபோது தந்தையையும் தடுத்தேன். திருமதியையும் உன்னுடன் பழக அனுமதித்தேன். ஏன்? முழுமையாக உன்னை உணர்ந்திருக்கிறேன் என்ற தப்புக் கணக்கால். அது தப்புக் கணக்குதான் என்பதை இப்போது மெய்ப்பிக்கிறாய்.
மணி: குணாளா! வேண்டாம், வேண்டாம்! என்னால் தாள முடியாது குணாளா! நாச்சூட்டைத் தாங்கிக் கொள்ளும் அளவு எனக்கு மன வலிவில்லை! ஐயோ, திருமதி! கேட்டாயா! நான் துரோகியாம்!வஞ்சகனாம்! ஒற்றனாம்! உளவாளியாம்! இவ்வளவு பெரிய பழியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது திருமதி! தாங்கிக் கொள்ள முடியாது. மயிர் நீப்பின் உயிர் நீக்கும் மானினத்தின் மாண்பு பற்றி உன்னிடத்தில்தான் அறிந்தேன் குணாளா! நீயா இப்படிச் சொல்கிறாய்? நீயா, என்னை ஐயுறுகிறாய்? கேட்டாயா திருமதி!