உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

127

ஆய்வுக்கூடத்துக்கு வந்து போகிறவர்களைப் பற்றியும், பணியாற்றுபவர்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்கிறான். மாதவன், மணிவண்ணன், திருமதி, அறிவானந்தர், மற்றும் ஏவலர்கள் அனைவரும் தனித்தனியாகவும், கூட்டமாகவும் அவன் மனத் திரையில் தோன்றுகின்றனர்.

நாலைந்து நாட்களாக மாதவன் ஆய்வுக்கூடத்துக்கே வராதது அவன் நினைவுக்கு வருகிறது. அவனே எடுத்திருக்கக் கூடுமோ என்று எண்ணுகிறான். இந்தத் திருட்டுத்தனத்தைச் செய்ததனால்தான் இங்கே வராமலிருக்கிறானோ என்று நினைத்துப் பார்க்கிறான். விக்ரமனிடம் கையூடு பெற்று, இந்த வேலையைச் செய்திருக்கலாமோ என்ற ஓர் எண்ணம் பளிச்சிடுகிறது. மாதவனை மட்டுமே, ஆதாரம் இன்றி எப்படி ஐயுறமுடியும் என்று அவனே சமாதானமும் செய்து கொள்கிறான்.

அடுத்து, அறிவானந்தரைப் பற்றி நினைக்கிறான். திருநாட்டுக்குத் தான் உதவி செய்ய முடியாது என்ற அவர் பிடிவாதம் எதனால் என்று நினைத்துப் பார்க்கிறான். ஒரு கால், அவரே இரகசியங்களை எதிரி நாட்டிடம் கொடுத்து விட்டிருக்கலாமோ? அதனால்தான் அரசாங்க உதவி பெற்றும், பிடிவாதமாக உதவிதர மறுக்கிறாரோ! மக்கள் அறிவார்கள் என்ற பேச்சில், போர் நடைபெற்றாலும் உயிர்கள் அழியத்தான் செய்யும் என்பதை அவர் அறியாமலா இருக்க முடியும்? மல்ல நாட்டின் வெற்றியைக் கருதித்தான் இப்படி செய்கிறார் என்று நம்பமுடியுமா? இரகசியங்கள் மல்ல நாட்குப் போய்ச் சேர்ந்திருக்குமோ!கார்மேகத்துக்கும் இவருக்கும் தொடர்பிருந்து, இவரே இரகசியங்களைக் கொடுத்தனுப்பி இருப்பாரோ என்றெல்லாம் எண்ணுகிறான். குழப்பம் முன்னிலும் அதிகமாகிவிடுகிறது.

தந்தையின் இலட்சியம் உயர்ந்தது என்றாலும், எதிரி நாட்டுக்கு உதவும்படியாக அந்த இலட்சியம் கூறப்படுகிறதா என்று எண்ணிப் பார்க்கிறான். சிந்தனை ஓட்டம் சிதைகிறது.