உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

133

அறி: என்ன சோதனை! என் மகளே கண்கலங்கக் கேட்கிறாள். ஒரு கணம் எனக்கு மனம் தடுமாறுகிறது! என் அருமை மகள் இப்படி வேறு எதைக் கேட்டிருந்தாலும் உடனே தந்திருப்பேன்.

திரு: உங்கள் பிடிவாதம் தலைநகரை வேதனையில் வீழ்த்தியிருக்கிறது அப்பா! தெருக்களில் எங்கும் இதே பேச்சு தான்! பெருமூச்சு கலந்த சோகக் குரல்கள்! அவற்றை நீங்கள் அறியமாட்டீர்கள்!

அறி: அவை எனக்குத் தெரிகிறது திருமதி! ஆனால் என் இதயத்தில் மண்டிக் கிடக்கும் வேதனையை உணர்வார் இல்லையே! ஒவ்வொரு சமயம் ஏன் இந்தத் தொல்லைகள்! மற்றவரைப் போல நாமும் வாழ்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. ஆராய்ச்சிக்கூடம் ஒன்றில் மட்டுமே வாழ்ந்து விட்டேன். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு உலகு இருப்பதை இப்பொழுது உணருகிறேன்!

திரு: அப்பா! மண்டியிட்டுக் கேட்கிறேன். பிடிவாதத்தை விடுங்கள்! சோகத்திலிருக்கும் தலைநகரை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்! நாடு வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது என்று நாடே நம்புகிறது.

[விக்ரமன் வருகிறான்]

விக்ர: பாரும் அறிவானந்தரே! உமது மகளே மண்டியிட்டுக் கேட்கிறாள்! திருநாடு வெற்றிபெற, மக்கள் எல்லோரும் இப்படி மன்றாடித்தான் கேட்கிறார்கள், உதவக் கூடாதா என்று?

அறி: திருநாட்டுக்கு வெற்றியென்றால் மல்ல நாட்டில் பிணங்கள் மலைபோலக் குவிக்கப்படும் என்பதை அவள் உணராமல் பேசுகிறாள். இந்தக் கொலைத் தொழிலுக்கு உடந்தையாக நான் இருக்கமாட்டேன்!

விக்ர: கொலைத் தொழிலா?

அறி: ஒருவனைக் கொன்றால் கொலை! ஓராயிரவரைக் கொன்றால் அது வெற்றி! அதுதானே உமது இலக்கணம்?