உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

இன்ப

விக்ர: அறிவானந்தரே! மல்ல நாட்டுப் படைகள் நமது எல்லையோரத்தில் குவிந்துவிட்டன! படையெடுப்பைத் தாங்கும் வலிமை திருநாட்டுப் படையிடம் இப்போது இல்லை. என்ன நேரும் தெரியுமா? எதிரிப் படைகள் நாட்டுக்குள் நுழைந்து, எதிர்ப்பட்டவைகளை யெல்லாம் அழித்துச் செல்லும்! பயிர்கள் நாசமாகும், கிராமங்கள் எரிந்து சாம்பலாகும், மக்கள் மடிவர், கன்னியர் கதறுவர், குழந்தைகள் அழும்! அறிவானந்தரே! எதிரிப் படைகள் உள்புகுந்தால், நாடு காடாகும்! அந்த நிலைமையைத் தடுக்க, உமது அறிவையும், ஆற்றலையும் உதவக் கூடாதா?

திரு: அப்பா! சரியென்று சொல்லுங்கள் அப்பா

[திருமதியின் வற்புறுத்தலால் ஒரு முடிவுக்கு வந்தவராக.]

அறி: சரி! நான் உதவி செய்கிறேன்!

விக்: அப்பாடா!

திரு: எனக்குத் தெரியும், அப்பாவின் உதவி நாட்டுக்குக் கிடைத்தே தீரும் என்று.

விக்: இரகசியத்தைத் தாருங்கள்! மல்ல நாட்டுக்கு நல்ல பாடம் கற்பிக்கிறேன்!

திரு: திருநாட்டுக்கு வெற்றி நிச்சயம்!

விக்ர: போரிடத் தயாராக வேண்டியதுதான். அறிவானந்தரே! உம்மைப் போன்ற உத்தமர் இருக்க முடியாது. இரகசியங்களைத் தர முதலில் ஒத்துக் கொண்டிருந்தால், இவ்வளவு தொல்லைகளும், கவலைகளும் வந்திருக்காது!

அறி: இப்பொழுதுகூட, இரகசியங்களைத் தருவதாக நான் ஒப்பவில்லையே!

விக்ர: (திகைப்புடன்) என்ன?

அறி: திருநாட்டுக்கு உதவி செய்வேன். போரிட அல்ல!

விக்ர: (புரியாமல்) பின் எதற்கு?

அறி: போரைத் தடுப்பதற்கு நான் உதவி செய்வேன்! எதிரிப் படை நாட்டுக்குள் புகுந்தால் நாசம் விளையும் என்று சொன்னீர்கள்! அந்த நாசம் விளையாதவாறு, நாட்டை நான் காப்பாற்றுவேன்! எதிரிப் படைகள் இங்கு நுழையாதவாறு நான் செய்கிறேன்!

விக்ர: எப்படி?