உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

இன்ப

மாதவா! தற்காலிகமாக இது சாந்தி தரக்கூடும். முயற்சித்துப் பார்க்கிறேன்.

[கூறிவிட்டு, கைகளால் இலைகளைக் கசக்கிச் சாறு பிழிந்து, இரணங்களின் மீது விடுகிறான். மாதவன் தாள முடியாது துடிக்கிறான். அவன் போடும் கூச்சல் அதிகமாகிறது. பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் மணிவண்ணன். மாதவன் துடித்துத் துடித்துச் சாய்கிறான். தலை சாய்ந்தே விடுகிறது! ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, கண்களில் வழியும் கண்ணீரை அவனுக்குக் காணிக்கையாக்கிவிட்டு, மாதவன் கொண்டு வந்த பெட்டியை எடுத்துக் கொண்டு மேலே நடக்கிறான்.]

காட்சி—44

[திருநாட்டுக்கும், மல்ல நாட்டுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியாக பேராறு ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதனைக் கடக்க மூங்கில்களாலும், கழிகளாலும் கட்டப்பட்ட பாலம் ஒன்று இருக்கிறது. அங்கு ஆடம்பரமிக்க இரு கோச் வண்டிகள் வந்து நிற்கின்றன. ஒன்றிலிருந்து அமைச்சர் அருளானந்தரும், குணாளனும், இன்னொன்றிலிருந்து அறிவானந்தரும், விக்ரமனும் கீழே இறங்குகிறார்கள். வானளாவியமலைகள் கண்ணுக்கினிய காட்சியாக இருக்கின்றன. குணாளன் மேலோட்டமாக அவைகளின் மீது கண்ணோட்டம் விடுகிறான்.]

[ஆற்றின் எதிர்க் கரையில் மல்ல நாட்டுப் படைகளின் கூடாரங்கள் தெரிகின்றன.]

காட்சி—45

[மல்ல நாட்டுப் படைத்தலைவனின் கூடாரம். துணைப்படைத் தலைவனுடன் போர் முறை பற்றியும், நிலை பற்றியும் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறான் படைத்தலைவன்.]