ஒளி
137
படைத்தலைவன்: துரோகி கார்மேகம் செய்த சதியால் போதிய வீரர்களுடன் நாம் வந்திருக்கவில்லை. முழுப் படையையும் உடன் அனுப்பி வைக்கும்படி அமைச்சருக்குச் செய்தி அனுப்பினேன். வீரர்கள் இன்னும் வந்துசேரவில்லை; நாளை மாலைக்குள் வந்துவிடலாம்!
துணைப்படைத்தலைவன்: பாதி வழியில் வந்து கொண்டிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்! கார்மேகத்தைச் சந்தித்த பிறகே, நாம் போர் பற்றி முடிவுக்கு வந்திருக்க வேண்டும்!
படை: உண்மைதான்! அவசரப்பட்ட முடிவு ஆபத்துக்கு அறிகுறி என்பார்கள். உண்மையாகிவிட்டது. திடீரென்று திருநாடு தாக்குதலைத் தொடங்கி விட்டால் இரு நாட்களுக்குக்கூட நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது! ஆனால், நமக்குத் தித்திப்பான ஒரு செய்தியும் கிடைத்திருக்கிறது! அறிவானந்தரின் இரகசியங்கள், விக்ரமனுக்குக் கிடைத்திருக்கக்கூடும் என்று எண்ணி இருந்தேன்! எந்த உதவியும் தர மறுத்து விட்டாராம் அறிவானந்தர்! ஆக்கச் சக்தி—அழிவுச் சக்தி என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் அவர். ஆத்திரத்தால் அறிவு கெட்டு, அறிவானந்தரைச் சிறைப்படுத்திவிட்டானாம் விக்ரமன்! ஒரு பேரபாயத்திலிருந்து தப்பியதற்கொப்பாகும் இது! படைகளுக்கும், படைகளுக்குமே மோதல் என்ற நிலைதான் இப்போது. என்றாலும் அந்தப் பலம்கூட இப்போது முழு அளவுக்கு நம்மிடம் இல்லை!
து. படை : நாம் முந்திக் கொண்டு திடீர்த் தாக்குதலைத் தொடங்கிவிட்டால், அந்த இக்கட்டிலிருந்தும் தப்பி விட முடியுமே தலைவரே!
படை: அப்படித்தான் நானும் முடிவெடுத்திருக்கிறேன்! இன்றிரவே எல்லையைக் கடந்து, திடீர்த் தாக்குதலை, எதிர்பாராத முறையில் ஆரம்பித்துவிட வேண்டும்! வீரர்களுக்குக் கட்டளை இடு. நிலைமைகளுக்கேற்ப, புதுப் புது போர் முறைகளுக்குரிய கட்டளைகளுக்குக் காத்திருக்கும் படிக் கூறு.