140
இன்ப
தால், போர்க் கோலத்துடன் களத்தில் சாவைச் சந்திக்கட்டும்! விக்ரமன் வீரனுமல்ல, கோழையுமல்ல! ஒரு முதியவரை அனுப்பிவைக்கும் முட்டாளாக இருக்கிறான்! இதோ பாரும்! மல்ல நாட்டுப் படைகள் குவிந்துவிட்டன. தாக்குதல் எப்போதென வீரர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். நான் கையசைத்தால் போதும்—மல்ல நாட்டுப் படை புறப்படும், மலைநாட்டுக்குள் போர்ப்புயல் வீசும்!
அறி: போர் வெறியில் இருக்கிறீர்! படைத்தலைவரென்ற மமதையில் பேசுகிறீர்! படைகளை வைத்துக் கொண்டு மட்டும் வெற்றிப் பட்டயம் பெற முயலாதீர்! நீர் கையசைத்தால், படை திரண்டு வரும் என்கிறீர்! நான் கையசைத்தால், குன்றே உருண்டு விழும்!
படை: பெரியவரே! உம்மிடம் மாயாஜால இரகசியங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்! ஆனால் மலையைப் புரட்டுவேன், குன்றை உடைப்பேன் என்று மட்டும் பயமுறுத்தவேண்டாம்!
அறி: வேடிக்கையல்ல; வெளியில் வாரும்–காட்டுகிறேன்! உமது படை புயலெனப் புகும் என்றீரே! திருநாட்டு எல்லைக்குள் உமது படைகள் அடியெடுத்து வைத்த மறுகணம் குன்றுகள் பிளக்கும்! பாறைகள் சிதறிவிழும்! யானையின் காலால் தேய்க்கப்படும் எறும்புக் கூட்டத்தைப் போல், உமது வீரர்கள் நசுக்கப்படுவார்கள்! இதோ பாரும்!
அமை: குணாளா! அதோ உன் அப்பா சைகை கொடுத்துவிட்டார் தெரிகிறதா!
[என்றதும், குணாளன் நெருப்பை எடுத்து ஒரு திரியைப் பற்ற வைக்கிறான்; திரி எரிந்து கொண்டே போய் வெடிக்கிறது. பெரிய பாறையொன்று வெடித்து விழுகிறது.]
[மல்ல நாட்டுப் படைத்தலைவன் பீதியுடன் அதைப் பார்க்கிறான்.]