இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒளி
141
அறிவா: போர் மூண்டால், உன் படைகள் சிதறி, இருக்குமிடந் தெரியாமல் அழிந்து போகும்! இதைவிடப் பலமான அறிவுச் சக்திகளை நான் அடக்கி வைத்திருக்கிறேன்! சண்டையா, சமாதானமா? நீயே முடிவு செய்துகொள்; நான் போகிறேன்!
[வந்த வழியே நடக்கத் தொடங்குகிறார். வீரர்கள் பயந்து எட்ட நின்று வழிவிடுகின்றனர்]
காட்சி—46
[விக்ரமன், குணாளன், அருளானந்தர் ஆகியோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அறிவானந்தர் வந்து சேர்கிறார்.]
அருளா: அதோ! மல்ல நாட்டுப் போர்க்கொடி தாழ்ந்து விட்டது! சமாதானக் கொடி உயர்கிறது!
குணா: அப்பாடா! சண்டை நின்றுவிட்டது.
[விக்ரமன் உடைந்துபோன பாறைகளையும், அறிவானந்தரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் திரும்புகிறான். அறிவானந்தர் புன்னகையுடன் பேச அருகில் வந்தும் ஏதும் பேசாமல் அருளானந்தருடன் ஒரு கோச் வண்டியில் ஏறிக் கொள்கிறான். அறிவானந்தர், குணாளன் இன்னொரு வண்டியில் ஏறிக் கொள்கின்றனர்.]
காட்சி—47
[மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் அறிவானந்தரை வரவேற்க வருகிறது.]
மலர்கள் தூவுகின்றனர்.
மாலைகள் போடுகின்றனர்.
மலைநாடு வாழ்க!
அறிவானந்தர் வாழ்க!
நாட்டைக் காப்பாற்றிய நல்லவர் வாழ்க!