உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

இன்ப

[என்று வாழ்த்தொலி எழுப்புகின்றனர். முதலில் செல்லும் வண்டியில் விக்ரமனும் அருளானந்தரும் இருக்கின்றனர். விக்ரமனுக்கு ஒருவன் மாலை போடுகிறான். விக்ரமன் கோபத்துடன் மாலையைக் கழற்றி எறிந்துவிட்டு, "வேகமாக ஓட்டு!" என்று சத்தமிடுகிறான்; வண்டி வேகமாகப் போகிறது.]

காட்சி—48

[அறிவானந்தரின் மாளிகை. அறிவானந்தருக்குப் போடப்பட்ட ஏராளமான மலர் மாலைகள் அங்கு குவிந்து கிடக்கின்றன.]

குணா: மக்களெல்லாம் தெருக்களில் வந்து நிறைந்துவிட்டார்கள்! தள்ளிக் கொண்டு வருவதற்குள் போதுமென்றாகிவிட்டது!

அறி: இன்று ஆரவாரித்த அதே மக்கள்தான், அன்று கல்லை வீசி துரோகியெனத் தூற்றினார்கள் குணாளா! அதைப்பற்றி அதிகம் நாம் பொருட்படுத்தக்கூடாது!

குணா: முதலில் மக்கள் உங்களைத் தவறாக நினைத்தார்கள்! சண்டையை நிறுத்தி சமாதானத்தை நிலவச் செய்ததும், பழைய மதிப்புடன் பாராட்டுகிறார்கள்!

அறி: குணாளா! நாம் விரைவில் இந்த இடத்தை விட்டுப் பழைய மண்குடிசைக்குப் போக வேண்டியதுதான்!

திரு: மறுபடியும் விக்ரமனிடமிருந்து தொல்லை வருமென்று நினைக்கிறீர்களா அப்பா!

அறி: இராஜ உபசாரமும் ராஜ தண்டனையும் தேவையில்லை. எங்கே திருமதி—மணிவண்ணன்?

[என்றதும், திருமதி, குணாளன் ஆகியோரது பொலிந்த முகம், குன்றிப் போகிறது. திருமதி ஏக்கத்துடன் விம்மத் தொடங்குகிறாள்.]

அறி: என்ன திருமதி! ஏன்? விபரீதம் ஏதாவது நடந்து விட்டதா?

குணா: (தலை குனிந்தபடி) இல்லை அப்பா! விபரீதம் இல்லை! நான்தான் அவனைத் துரத்திவிட்டேன்.