உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

145

அறி: எண்ணத்தில் வந்த எல்லாரிடமும் உன் சந்தேகம் பாய்ந்திருக்குமே! குணாளா, தீர்மானமாக ஒன்றில் தெளிவு பெறும்வரை, யார்மீதும் களங்கம் காண முயலக் கூடாது! உனக்குத் தெரியுமா, குணாளா? இந்தக் குறிப்பேட்டில் சில பகுதிகள் உண்மையிலேயே களவு போயிருக்கின்றன. யார் யார் இப்படிச் செய்திருக்க முடியும் என்று எண்ணிப் பார்த்தேன்! மறுகணமே, சிறைவாசம் கிடைத்தது.

குணா: (திடுக்கிட்டு) என்ன சொல்கிறீர்கள் அப்பா! சில பகுதிகள் திருட்டுப் போயுள்ளனவா?

அறி: (குறிப்பேட்டைக் கொடுத்து) ஆமாம், குணாளா! நாசப்பொடி தயாரிக்கும் குறிப்புக்களைக் காணோம்!

குணா: (வாங்கிப் பார்த்துவிட்டு) யாருடைய வேலையாக இருக்கும் அப்பா?

[என்கிறபோது மணிவண்ணன் வருகிறான்.]

மணி: (வந்துகொண்டே) நான் சொல்கிறேன்—நாசப் பொடி செய்யும் குறிப்பேடு மட்டுமல்ல, நாசப்பொடியும் கூட களவுபோய் இருக்கிறது; தீப்பொருளும் திருட்டுப்போயிருக்கிறது.

அறி: வா, மணிவண்ணா! நாசப் பொடியும், தீப்பொருளுமா?

குணா: கோபம் குறைந்துவிட்டதா மணிவண்ணா! உன் இலட்சியம்தான் வெற்றி கண்டது என்று தெரியுமா?

அறி: எனக்குத் தெரியும் குணாளா, மணிவண்ணனைப் பற்றி!

மணி: ஐயா! திருடியவனும், திருடுவதற்குக் காரணமாயிருந்தவளும், இந்த உலகத்தை விட்டே போய்விட்டார்கள்!

குணா: என்ன! கொலை செய்துவிட்டாயா மணிவண்ணா!