148
இன்ப
வும் முடியும் என்பது மனிதர்களது நாவிற்கிருக்கும் சிறப்புக்களில் ஒன்று. மிருகங்கள் அப்படியில்லை. பேராசை கிடையாது. பசித்தால் புசிக்கின்றன, காலம் வந்தால் சாகின்றன. உணவுக்காகப் போராட்டங்கள் இல்லை; காதலுக்காகப் போர்க் களங்களைச் சந்திப்பதில்லை. மனித சமுதாயம், தன் மாண்பினை இழந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி, மனிதர்கள் எல்லாம் கூடிப் பேசி, ஒரு முடிவெடுத்தால் நல்லது. அப்போதும் அந்த மனிதர்களால் நல்லதோர் முடிவை நாட்டுக்குத் தரமுடியுமோ என்னவோ! மதிப்பு என்பது நாளும், எந்தவொருவரிடமிருந்தும் கேட்டுப் பெறுவதல்ல; தானாக வந்தடைவது அது. தகுதியால், மற்றவர்களால் வழங்கப்படுவது அது. கேட்டுப் பெறுபவர்களாக மக்கள் கூட்டம் மாறிக் கொண்டிருக்கிற நிலைமை மாற்றப்பட வேண்டும். ஆழ்கடலில் காற்றுக்கும் புயலுக்கும் இடையே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலைமையோடுகூட வாழ்க்கையினை உவமித்திருக்கிறார்கள். காற்றடிக்கும், புயல் வீசும் என்பதெல்லாம் கண்டறியப்பட்டு, எச்சரிக்கை நடவடிக்கையால் மீகாமி கடலில், கலம் செலுத்தும்போது, எதிர்ப்படும் பேராபத்துக்களைச் சமாளித்து விடுவான். பூந்தோட்டமாகக் கருதினாலும், புதர்க்காடாகக் கருதினாலும், அமைத்துக் கொள்கிற வழி முறைகளையொட்டி வாழ்க்கை அமையுமென்று சொல்லிவிட வேண்டியது என் கடமை! மரத்தை வெட்டிவிட்டு, களைத்துப் போன நிலையில், இன்னோர் மரத்தடியிலிருந்து–அந்த மரத்தின் நிழலிலிருந்து மனிதன் ஓய்வெடுக்கிறான். களைப்பாறுகிறான்! நிழல் தரும் மரம், அவனைப் புறக்கணிப்பதில்லை, நம் இனத்தை அழித்தவன் ஆயிற்றே என்று அவனுக்கு நிழல் தர மறுத்து விடுவதில்லை. ஓய்வெடுத்த பின், களைப்பு நீங்கிய பின் நிழல் கொடுத்த மரத்தையேகூட மனிதன் வெட்டிச் சாய்ப்பான்! இதுபோல் கேடு தந்தவர்கட்குக்கூட, கேடு நினையாமல் நிழல் கொடுக்கும் மரம்போல் நீங்கள் பல்லாண்டுக் காலம் வளம் பல பெற்று வாழ வேண்டும்!