உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

149

காட்சி—50

[திருநாட்டு அரண்மனை. ஆத்திரத்தோடு விக்கிரமன், அறிவானந்தரை விசாரணை நடத்துகிறான்.]

விக்ர: அறிவானந்தரே! அறிவியல் அறிஞர் என்று வாயாரப் புகழ்ந்தேன். ஆராய்ச்சி வல்லுநர் என்று அகமகிழ்ந்தேன்! அரை நொடியில், அந்த எண்ணங்கள் தவறானவை என்றாக்கிவிட்டீர். திருநாட்டுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்ய எப்படி ஐயா உம்மால் முடிந்தது?

அறி: பாதுகாவலரே! பதட்டத்துடன் பேசுகிறீர். பக்குவமறியாத குழந்தையைப்போல் கேள்வி கேட்கிறீர். பயங்கரமான குற்றம் சுமத்துகிறீர். குற்றச்சாட்டு என்ன? அதைக் கூறுங்கள்.

விக்ர: நீர் திருநாட்டுக்குச் செய்த துரோகம் என்னவென்று, நான் கூறித்தான் அறிந்து கொள்ள வேண்டுமா? நெஞ்சு நிரம்பிய வஞ்சம், உனது நினைவுக்குக் கொண்டுவர மறுக்கிறதா?

அறி: விக்கிரமா! உயர்ந்த இடத்தில் இருப்பதால் எதையும் பேசலாம், உயர்ந்தவர் பார்வையில் இருப்பதால் எதையும் செய்யலாம் என்ற இழிவான எண்ணம், உன்னை இப்படிப் பேசவைக்கிறதுபோலும்! துரோகி என்றும், வஞ்சகன் என்றும் பேசுவதைப் பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு மனப்பக்குவம் இல்லை! கோபம் கொடிது என்றாலும், கோபமே கொள்ளாமலிருப்பதும் கொடிதாகிவிடக் கூடும்! கூறு, குற்றம் என்ன என்பதை!

விக்ர: ஓ, செவி குளிரக் கேட்கவேண்டுமோ அந்தச் சிந்து பைரவியை! கேளுங்கள். நீர் மல்ல நாட்டு ஒற்றன் என்று நம்பகமான இடத்திலிருந்து தகவல் வந்திருக்கிறது. மல்ல நாட்டானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவன் படைகளைத் திருப்பி அனுப்பினீர் என்ற உண்மை கிடைத்திருக்கிறது. மல்ல நாட்டுக்காகவே, நீர் உமது ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருப்பதாகச் செய்திகள் கிடைத்துள்ளன.