150
இன்ப
அதன் காரணமாகவே, ஆராய்ச்சி இரகசியங்களையும் ஆராய்ச்சிப் பொருள்களையும் திருநாட்டுக்குத் தர மறுத்து வந்திருக்கிறீர்!
அறி: (மிகுந்த ஆத்திரத்தோடு) விக்ரமா! தடித்த உன் வார்த்தைக் கோர்வைகளால் தவறு செய்து கொண்டிருக்கிறாய்!
விக்ர: உண்மைதான்! தரப்பட்ட தகுதிகள் அனைத்தும் தவறானவை என்பதற்குச் சான்றாக—அறிவானந்தரே, உன் மகளையே மல்ல நாட்டான் ஒருவனுக்கு மணமுடித்துத் தந்திருக்கிறீர்!
அறி: (உரத்த குரலில்) விக்ரமா! அது என் சொந்த விஷயம்!
விக்ர: சொந்த விஷயம்தான்! மல்ல நாட்டோடு ஒப்பந்தம் செய்து கொண்டதும் சொந்த விஷயம்தான்! ஆராய்ச்சிகளை நடத்தி வருவதும் சொந்த விஷயம்தான்!
அறி: விக்ரமா! மீண்டும் மீண்டும் என்னைத் 'துரோகி! வஞ்சகன்!' என்று கூறிக்கூறி, உண்மையாக்கிவிடப் பார்க்கிறாய். உன் குற்றச் சாட்டுகளை மறுக்கிறேன். ஆதாரம் காட்டிப் பேசுவது அரசியலார் கடமை!
விக்ர: நான் சொல்லுகிறேன்! நீர் திருநாட்டுக்குத் துரோகி! மல்ல நாட்டு ஒற்றன்! மறுக்கிறீரா? மறுப்பதற்கும் அல்லவென்று நிரூபித்துக் கொள்வதற்கும் உமக்குச் சந்தர்ப்பம் தருகிறேன்! கூறுங்கள் உமது ஆராய்ச்சி இரகசியத்தை? திருநாடு தெரிந்து கொள்ளும்படிக் கூறுங்கள்!
அறி: விக்ரமா! பகைவருக்கும் அருள் பாலிக்க வேண்டும் என்ற பண்பினைப் பரப்பப் பாடுபடுபவன் நான். குற்றச்சாட்டுகளால் என் குணத்தை மாற்ற முயல்கிறாய். 'துரோகி! வஞ்சகன்! மோசக்காரன்!' என்ற வரிசையில் உனக்குத் தெரிந்த வார்த்தைகளை அடுக்கிக் காட்டு! பொறுத்துக் கொள்ள முயல்கிறேன். இரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேன்!