ஒளி
15
'எழுந்தது சேனை!
எட்டுத்திக்கும் அதிர்ந்தது முரசம்!
எங்கும் தூளி! எங்கும் குருதி!
வீரம் வென்றது!
தீரம் வென்றது!'
என்று இளைஞர்கள் மட்டுமல்ல, களம் பல கண்ட பெரியோரும் இப்படிக் கழறுவது கேட்கிறேன். போர் நடாத்திடச் செலவிடும் நேரம், உழைப்பு ஆகியவற்றினைப் பொருள் செய்திடப் பயன்படுத்தினால்? வறுமை ஒழியுமே! வாட்டம் தொலையுமே! வாழ்வு சிறந்திடுமே! கேட்கத்தான் நினைக்கிறேன்! பேய்க்காற்று பெரிதாக வீசிக் கொண்டிருக்கும் வேளையில், குழலெடுத்து கீதம் இசைக்கலாமா? உணர்கிறேன்; ஒடுங்கிப் போகிறேன்.
வீடுகள் வீரக் கோட்டங்களாகிவிட்டன; நாடு போர்க் கோலம் பூண்டுவிட்டது. அந்த நிலையில் அமைதியென்றும், அறம் என்றும் ஆலாபனை பாடலாமா? பாடவிடுவார்களா?
திருமதி: அப்பா! போரே கூடாது என்று நாம் இருந்துவிடலாம். நம்மைப்போல் அடுத்த நாட்டவரும் இருப்பார்களா? அடுத்தவர் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்போது நம் அறவுரைகளே நமக்கே ஆபத்தாகிவிடாதா?
அறிவா: உண்மை மகளே! நாம் மட்டும் அறம் உரைத்துக் கொண்டு அடங்கிப் போவது ஆபத்து மட்டுமல்ல, நம் வீரர்களது வீரம்கூட மங்கித்தான் போகும்! அடுத்தவனுக்கு நாம் அடிமையாய்த்தான் போவோம்; அதனால்தான் நான் கூடாது என்கிறேன் போரை! நம் நாட்டுக்கு மட்டுமல்ல — இந்த நானிலத்தையே நல்வழிப் படுத்தத்தான் மகளே நான் பாடுபடுகிறேன். இரவு பகல் பார்க்கிறேனா? வெயில் மழையென்று விரக்தியடைகிறேனா? இரவைப் பகலாக்கி, பகலை உழைப்பாக்கிப் பாடுபடுகிறேன்! திருநாட்டை வளங்கொழிகச் செய்யும் திருநாடாக்க! வறுமையை ஒழித்துக்கட்ட! வாழ்வு தர என் ஆராய்ச்சி மட்டும் முற்றுப்பெற்று விட்டால்?...