உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

155

உடை வாளுடன் உள்ளே நுழைந்த குணாளனைத் தடுக்கிறார்கள் சில வீரர்கள். எதிர்ப்பட்டவர்களை யெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு உள்ளே நுழைகிறான் குணாளன். மன்னன் குமாரவேலனுடன் பேசிக் கொண்டிருக்கிறான் விக்ரமன்.

விக்: மன்னா! மருதூரானின் அச்சுறுத்தலைச் சமாளிக்கவே அறிவானந்தரிடம் மீண்டும் நாசப் பொடியைக் கேட்டேன். மறுத்துவிட்டார். மறுத்தது மட்டுமல்ல; திருநாட்டையே இழிவு படுத்திப் பேசத் தொடங்கிவிட்டார். பெற்ற தாயைவிட, பிறந்த பொன்னாட்டைப் பெரிதெனப் பேணுபவன் நான். பொறுக்க முடியவில்லை. ஆத்திரத்தால் அவர் மீது கூர்வாளைப் பாய்ச்சிவிட்டேன்.

குமா: கொலை செய்து விட்டேன்; அவர் குடியைக் கெடுத்துவிட்டேன் என்று கூறுங்கள் பாதுகாவலரே!

விக்: மன்னர் கூறுவது...

குமா: விக்ரமருக்கு மமதை அளவு கடந்து விட்டதென்று!

[வீரன் ஒருவன் ஓடிவந்து]

வீரன்: (மன்னனை வணங்கி) அரசே! மக்கள் கூட்டம் அரண்மனை வாயிலை அடைத்துக் கொண்டு நிற்கிறது! குணாளனும் உடைவாளுடன் வந்து கொண்டிருக்கிறார். 'விக்ரமன் ஒழிக!' 'அறிவானந்தரைக் கொலை செய்த கொடியவனைக் கூறுபோடுவோம்' என்று குரல் கொடுக்கிறார்கள்.

விக்ர: வேழப் படையைத் திறந்துவிட்டு, விரட்டச் சொல், அந்த வீணர்களை! போ!

[குணாளன் வந்து நின்று]

குணா: அது தேவையில்லை விக்ரமரே! வேழமென வந்திருக்கிறேன் நான். என் தந்தை ஏன் கொலை செய்யப்பட்டார்? கூறுங்கள் முதலில்!