154
இன்ப
காட்சி—52
தெரு வீதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று அறிவானந்தர் விக்ரமனால் கொலை செய்யப்பட்டுவிட்ட செய்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
செய்தியைக் கேட்ட மக்கள் ஆத்திரமடைந்து அரண்மனைப்பக்கம் ஓடுகிறார்கள். தலைநகரே திரண்டு அரண்மனையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
திருமுடியாரின் போலிப் புரட்டைப் பொசுக்கிக் காட்டிய புகழ் பேசப்படுகிறது. மல்ல நாட்டுப் போரை கத்தியின்றி, ரத்தமின்றி முடித்துக் கொடுத்த பேராற்றல் பற்றிப் பேசப்படுகிறது.
நாசப் பொடியை, விக்ரமனுக்குக் கொடுக்க மறுத்த செய்திகேட்டு அவரைத் துரோகியெனத் தூற்றியவர்கள் எல்லாம், போர் ஏற்படாமல் தடுத்தாட்கொண்ட நிகழ்ச்சியால், உள்ளம் குன்றியவர்களானாலும், கொலைச் செய்தி கேட்டு, ஆத்திரத்தோடு அரண்மனைப் பக்கம் ஓடுகின்றனர்.
குணாளன் ஓடிவருகிறான். பின்னால் மணிவண்ணன் வருகிறான். அரண்மனைக்கருகில், வீரன் ஒருவன் உடைவாளுடன் வந்து கொண்டிருக்கிறான். அவனைக் கண்ட குணாளன், அவனை ஒரே அடியில் வீழ்த்தி விட்டு, உடைவாளைப் பறித்துக் கொண்டு அரண்மனைக்குள் நுழைகிறான். கூட்டமும் வாயிலில் வந்து நிற்கிறது.