உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

153

குணா: என்ன (பரபரப்படைந்து) என்ன? யார் நீ? என்ன உளறுகிறாய்?

வந்தவன்: ஐயோ! அறிவானந்தரைக் கொன்றுவிட்டான் விக்ரமன்! கொலை செய்துவிட்டான் அந்தப் பாவி!

[மணிவண்ணன் ஆத்திரமடைந்து அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து]

மணி: என்ன பிதற்றுகிறாய்! யார் நீ?

வந்த: பிதற்றவில்லை ஐயா! அரண்மனையில் அறிவானந்தரைக் கைது செய்து, பாதாளச் சிறையிலடைத்துப் பட்டினி போடும்படிக் கட்டளையிட்டான் விக்ரமன்! அதுகூட அவனுக்குப் பொறுக்கவில்லை; சிறைக்கூடத்துக்குப் போய் வெட்டிக் கொன்றுவிட்டான்! நான் கண்ணாலேயே பார்த்தேன்! சிறைக் காவலன் ஐயா நான்!

[என்றதும் திருமதி "அப்பா!" என்று அலறி மூர்ச்சித்து விழுகிறாள். குணாளன் மூச்சற்று, திகைத்து நிற்கிறான்.]

மணி: முட்டாளே! எவ்வளவு சந்தோஷமான செய்தியுடன் இருந்தோம்! சாவோலையுடன் வந்திருக்கிறாயே! அறிவானந்தர் வெற்றி பெற்றுவிட்டாரடா, வெற்றி பெற்றுவிட்டார்! அறிவானந்தரது பசிப்பிணி மருத்துவம் வெற்றி பெற்றுவிட்டது! இந்த இன்பச் செய்தியை, அவர் செவியில் சேர்ப்பதற்கு முன், எங்களைக் கொன்று போட்டுவிட்டாயே, கொடியவனே!

[என்று மீண்டும் அவனை அடிக்கப் போகிறான்; அதற்குள் நிதானம் வந்தவனாக...]

நீ என்ன செய்வாய்! ஓலை கொண்டு வந்தவன் நீ. உண்மையைச் சொல், அறிவானந்தர் கொலை செய்யப்பட்டதாக விக்ரமன் அறிவிக்கச் சொன்னானா? அறிவிக்க வந்தாயா நீ!