உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

19

குருக்கள்: எல்லாம் அம்பாளுடைய கிருபை! அம்பாள் அருள் இல்லையானா திருநாட்டுக்கு வெற்றியேது? ஒரு மண்டலம் லட்சார்ச்சனை செய்துண்டிருந்தார் நம்ம திருமுடியார்! தெரியுமோன்னோ?

ஒருவர்: தெரியுமே! விக்ரமபூபதியோட வாள் வீச்சும் குணாளனுடைய வேல் வீச்சும் எதிரி நாட்டானை ஓட ஓட விரட்டிடிச்சாம்! தெரியுமே.

குருக்: அட பைத்தியக்காரா! வாளும் வேலும் இருந்து என்ன பண்றது? எதிரி நாட்டானுக்கிட்டே மட்டும் இல்லையா வாளும் வேலும்? நம்ம விக்ரமருக்கு அம்பாளோட வரப்பிரசாதமும் சேர்ந்து இருந்தது; வெற்றி கிடைச்சுது.

இன்னொருவர்: சரிதான் சாமி! வீரம் விளைஞ்ச மண்ணு இது. விவேகமும் இப்போ விளைஞ்சுக்கிட்டிருக்கு. வீணுக்கு எதுக்குப் பேச்சு! பிரசாதம் கொடுங்கோ! (குருக்கள் பிரசாதம் கொடுக்கிறார். கூட்டம் பெற்றுக்கொண்டு கலைகிறது. கலையும் கூட்டத்தில் இருவர்...)

ஒருவர்: திருமுடியார் ஒரு மண்டலம் லட்சார்ச்சனை செய்தாராமே!

மற்றவர்: ஆமாம்! திருநாட்டுக் கோயில்கள் எல்லாத்துக்கும் அவர்தானே அதிகாரி! குமாரவேலர் இந்த நாட்டுக்கு ராஜா. குருக்கள் திருமுடியார் இந்தக் கோயில்களுக்கு ராஜா! வீரம் வெற்றி பெற்றது அங்கே; திருமுடியாரின் விவேகம் அதை வெற்றி கொள்ளப்பார்க்குது இங்கே! திருமுடியார்க்கு விக்ரமபூபதி மேலே ஒரே கோபமாம். சண்டைக்கு அப்புறம், விக்ரமபூபதிக்கு முன்னைக் காட்டிலும் செல்வாக்கு அதிகமாப் போச்சு.

முன்னவர்: பின்னே இருக்காதா? வெண்ணாட்டுப் போர் சாமான்யமா? அடுத்தவீட்டு ஆறுமுகம் போயிருந்தானே சண்டைக்கு! அவன் சொல்றதைக் கேட்டா, விக்ரமபூபதி இல்லேன்னா வெற்றி நமக்கில்லேன்னுதான் நெனைக்கத் தோணுது.