ஒளி
23
போர் முடிந்தபின், போரில் ஈடுபட்ட நாடு, நாட்டின் நலிவை நல்லபடியாக்க புதுவரிகளைப் போடத்தான் செய்யும்! அறிவேன்! அரசாங்கத்தால் போடப்பட்ட வரிகளை அக்கறையுடன் செலுத்தவேண்டிய கடமையும் மக்களுக்கு உண்டு. இல்லையா விக்ரமரே!
விக்கிர: சொல்லுங்கள்!
அருண: வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் மக்கள், மக்களுக்கு வாழ்வளிக்கக் கடமைப்பட்டவர்கள் நாம்! வரிப் பணம் நம்முடைய நலனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை, அறிவுள்ள எந்த மக்களும் விரும்பமாட்டார்கள்! வரி வசூல் மட்டுமே அரசாங்கக் கடமை என்று எந்த அறிவுள்ள அரசும் கருதாது; செயல்படாது.
விக்ர: சந்தர்ப்பச் சூழ்நிலைகளும் கவனிக்கப்பட வேண்டும் அமைச்சரே!
அருணா : கவனிக்கப்படத்தான் வேண்டும். மக்களால் மட்டுமல்ல—அரசினாலும்! போர்க் கருவிகளைப் புதுப்பிக்க நாம் எடுக்கின்ற நடவடிக்கைகளில் பத்தில் ஒரு பங்காவது நாட்டு மக்களின் நலிவகற்றும் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கினோமா? வயல்கள் வறண்டு கொண்டிருக்கின்றன; தொழில் துறைகள் தேக்கமடைந்து வருகின்றன! இல்லாத மக்கள் இருப்பவரைப் பார்த்து ஏங்குகிறார்கள்! இந்த ஏக்கம், இருப்பவனிடமிருந்து இல்லாதவற்றை, இல்லாதவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தைத் தந்துவிட்டால்? மக்கள் கேட்கிறார்கள் இப்படி. பதில் சொல்ல முடியவில்லை! எங்களுக்கு வாழ்விருந்தால்தான் அரசுக்கும் வாழ்வு என்று வெளிப்படையாகவே கூறுகிறார்கள். எதிர்த்துரைக்க இயலவில்லை.
விக்ர: அமைச்சர் அல்லவா நீங்கள், அக்கறை அதிகம் இருக்கத்தானே செய்யும். மல்ல நாடு வளம்மிக்கபூமி! மருதூர் பொன்கொழிக்கும் நாடு. போர்த் தொடுப்போம்! பூண்டோடு அழிப்போம் அந்தப் புல்லர்களை! பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொண்டுவந்து அளிப்போம், திரு நாட்டு மக்களுக்கு!