உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இன்ப

அருண: உம்மைத்தான் எதிர்பார்த்தேன் விக்ரமரே! அவசரமான செய்தி!

விக்ர: அரசியல் என்பதே அவசரத்துடன் பிணைக்கப்பட்டதுதானே அமைச்சர் அவர்களே! உண்ண நேரமில்லை; உறங்க நேரமில்லை; ஓய்வில்லை; ஓழிச்சலில்லை.

அருண: இருக்காதா பின்னே! வெண்ணாட்டை வென்ற மகிழ்ச்சியைவிட, களைப்பு அதிகம் மேலிட்டிருக்குமே; காவல் பணிகள் மிகுந்திருக்குமே!

விக்ர: உண்மை! அமைச்சர் அவர்களே! திருநாட்டின் மக்கள் தீரர்கள் என்பதை, தினவெடுத்தவை அவர் தம் திண்தோள்கள் என்பதை, திக்கெட்டும் உணர்த்தியாக வேண்டாமா? மமதையுடன் இருக்கிறது மல்லநாடு! மருதூரான் மண்டைக்கனம் கொண்டுள்ளானாம். கலனாகிக் கிடக்கும் கருவிகளைப் புதுப்பித்தாக வேண்டுமே! வேல்கள் வடிக்க வேண்டும்; வாட்கள் படைக்க வேண்டும்! கூரற்ற வேலுக்கும் முனையற்ற வாளுக்கும் உயிர் உண்டாக்க வேண்டாமா? ஓய்வேது, ஒழிவேது!

அருண: ஆமாம் விக்ரமரே! ஓய்வின்றி ஒழிவின்றி போர்க் கருவிகளைப் புதுப்பிக்கவும், படைப் பெருக்கம் உண்டாக்கவும் உழைக்க வேண்டியதுதான். வீரர்கள் போர் முகத்திலிருந்து போர்புரிய, எதிரியின் மார்புறத்தில் வேல் பாய்ச்ச, வாள்வீச, உயிர் இருந்தால்! உயிரைத் தாங்கி நிற்கும் வலுவிருந்தால்! தளபதியாரே! திருநாட்டின் வீரம் என்றுமே சோரம் போனதில்லை என்பதற்கு நீர் சான்று! ஒப்புக் கொள்கிறேன். வீரர்களின் உயிரைத் தாங்கி நிற்கும் உடலுக்கு வலுவேற்றும் பணி தடைப்பட்டிருக்கிறது! மறவர் குடி மக்களின் மனம் போர்வெறித் தன்மையிலிருந்து மாறுபட்டிருக்கிறது...

விக்ர: அமைச்சரின் பேச்சு...

அருண: ஆத்திரத்தை ஊட்டக் கூடாது; கருவூலம் முழுவதும் கருவிகளின் முன்னேற்றத்துக்கு மட்டுந்தானா என்று கண்டிக்கின்றனர். வாழ்வு காண முடியாத மக்கள்,