உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

இன்ப

கார்: ஆமாம்! நான் கொள்ளையடிக்க வந்திருக்கிறேன்; போடா போ, பைத்தியக்காரா! நான் வந்திருப்பதற்கு வகுத்துக் கொண்டிருக்கும் கொள்கையே வேறு! இல்லாதார்—இருப்பார்—சுரண்டுவோர்—சொகுசு வாழ்வுக்காரர்கள் பற்றியெல்லாம் நான் கவலைப்பட முடியுமா? ஏழை என்பதற்காக இந்தா எடுத்துக் கொள் என்று ஒரு எழில் முத்தைத் தந்துவிட்டால்? ஏற்றம் பெற்றுவிடுவானா என்ன?

மணி: உங்கள் போக்கே எனக்குப் புரியவில்லை!

கார்: புரிந்து கொள்ளும் நாள் வரும்டா! புரியாமலா போகப் போகுது. போ! போய், படம் போடு; பாட்டெழுது.

அம: நல்ல புள்ளைங்கடாப்பா நீங்க. ஒரு வயத்திலே தான் பொறந்திருக்கீங்க! ஒருத்தருக்கொருத்தர் இப்படியா இருக்கிறது!

காட்சி—16

[குணாளன் சோலையொன்றில் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அருகில் மணிவண்ணன் அமர்ந்து கவிதையொன்றை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறான். அதைக் கவனித்த குணாளன்...]

குணா: அற்புதமா இருக்கே பாட்டு! யார் எழுதினது?

மணி: யாருண்ணே தெரியலே! நேற்று அங்காடிப் பக்கம் போயிருந்தேன். கீழே கிடந்தது ஓலைச் சுவடி ஒன்று எடுத்துப் பார்த்தேன்...இன்பமூட்டும் இசைப் பாடல்கள்! நீங்க யாரு?

குணா: இந்த நாட்டுக்குச் சொந்தக்காரன்தான்! நாட்டு மக்கள் வாழ்வு நலியக்கூடாதென்று பாடுபடற கூட்டத்துக்குச் சொந்தக்காரன்தான்! நீங்க?

மணி: வெளியூரு. ஆனால் வந்த இடத்திலே இருக்கிற வாழ்வு, வந்தவுங்களுக்கே என்கிற வேதாந்தம் பிடிக்காதவன்.

குணா: அழகா தத்துவம் பேசுறிங்களே!