உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

43

அமராவதி தாயார்: நாடு விட்டு நாடு வந்து அப்படி என்னதான் வாரிக் கொட்டப் போறியோ! உருப்படறமாடுன்னா உள்ளூர்லேயே விலைபோகாதா?

கார்: உனக்குத் தெரியாதும்மா, திருநாட்டு வளத்தைப் பற்றி. கழுதைக்கு கற்பூர வாசனையும், கழுகுக்கு கமல மலரின் அழகும் தெரியாது. முத்தின் அருமை இந்த நாட்டுக்குத்தான் தெரியும்.

மணி: ஆமாம்மா! முத்தோட அருமை தெரியாமெ தான் அந்தக் காலத்திலே ரோம் நாட்டுப் பேரரசி சாராயத்திலே கலந்து கரைச்சிக் குடிச்சாளாம்! அருமை பெருமை புரிஞ்சவர் அண்ணன்! அதனால்தான்...

கார்: டேய் மணிவண்ணா! சித்திரம் எங்கே இருக்கு? வண்ண ஓவியம் வரையப்பட்டிருக்கிற முறை என்ன? காலத்துக்கும், இயற்கைக்கும் கவிதைகள் பொருந்தி வருதாங்கிற பைத்தியக்காரத்தனமான ஆராய்ச்சியிலேயும், அழகிலேயும் புதைஞ்சி கிடக்கிறவன் நீ. அருளும் திருவும் ஒன்றாக அமைந்திருப்பது திருநாடு. அதன் அருமை பெருமைகளை அறிந்துப் பயன்படுத்திக் கொள்ள வந்திருக்கிறேன் நான்.

அமரா: என்னமோ போங்க! நீங்க ரெண்டு பேரும் ரெண்டு கண்ணு எனக்கு. ஒண்ணு உயர்வுமில்லே; இன்னொன்னு தாழ்வுமில்லே. ஒற்றுமையா இருந்து உழைக்கணும்; உயரணும்.

மணி: அண்ணா! வணிகர்கள் என்றால் எப்போதுமே சமூகத்தின் ஒரு தனி அங்கமாகவே கருதப்பட்டுவிடக்கூடாது. சமூகத்தில் அதுவும் ஒரு பகுதி! சமூக மக்களின் உயர்வுக்கும், தாழ்வுக்கும், நல்லதற்கும், கெட்டதற்கும் வணிகர்களும் காரணமாக இருக்கிறார்கள்—என்றெல்லாம் பெரியவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன்! வணிகத்தின் பேரால், இருப்பவர்கள், இல்லாதவரிடமிருந்து சுரண்டும் தன்மையை சுபாவமாகக் கொண்டுவிடக் கூடாது.