உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

47

அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டிருக்கும்போது, ஆண்டியாகிவிட்ட ஒருவனால் என்ன செய்ய முடியும்? என்றாலும் விக்ரமனைப் பழி வாங்கியே தீருவது என்று துடியாய்த் துடிக்கிறார். விக்ரமன் பழி வாங்கப்படவும் வேண்டும்; இழந்த தன் பெருமையையும் பீடினையும் மீட்டாக வேண்டும். விக்ரமனைவிட, ஈசன் அருள் பெற்ற தானே மேலோன் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்பன போன்ற எண்ண அலைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் அறிவானந்தரது ஆராய்ச்சிகள் பற்றிய செய்திகள் அவருக்கு எட்டுகின்றன. முடிவான ஆராய்ச்சியின் இடைப்பட்ட சில வெற்றிகள் பற்றி அவருக்குக் கிடைத்த செய்திகள் அவரது திட்டத்துக்கு வலுவூட்டுவனவாயிருக்கக் கூடும் என்று நம்புகிறார். எனவே, அறிவானந்தரது ஆராய்ச்சிக் கூடத்துடன் தொடர்பு கொள்ள முயன்று தோற்கிறார். ஆகவே அங்கே தொடர்பு கொண்டிருப்பவர்கள் பற்றி அறிய முயன்று, சரியான வழி அதுதான் என்று முடிவுக்கு வருகிறார். முகத்தில் மகிழ்ச்சிக்குறி அரும்புகிறது.]

காட்சி—18

[ஊரின் புறப்பகுதி. திருமதி பச்சிலை வகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறாள். அங்கு மணிவண்ணன் வருகிறான். அவனைப் பார்த்துவிட்டு...]

திருமதி: நான் பச்சிலை பறிக்க வந்தேன்!

மணி: நானுந்தான்! உன் அப்பா, எனக்கும் அந்த வேலையைத் தந்துவிட்டாரே! எங்கே நான் உன்னைப் பறித்துவிடுவேனோ என்று பயப்படுகிறாயா, திருமதி!