உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

இன்ப

[திருமதி அரங்கின் உள்ளே போய், நாட்டிய உடையினை மாற்றிக் கொண்டு வந்து அரங்கில் ஆடுகிறாள். திருமதியின் ஆட்டம் கண்டு, அவையே ஆடுகிறது. மன்னர் பாராட்டிப் பரிசளிக்கிறார் அவளுக்கு.]

குமார: எதிர்பாராமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு. உங்களையெல்லாம் உளம் பூரிக்கச் செய்த கலையரசி திருமதிக்கு, என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! ஆடலரசி என்ற விருதினைச் சூட்டுகிறேன்.

[அவையில் மகிழ்ச்சி ஆரவாரம் ஏற்படுகிறது. அரங்கில் இருந்தோர் கலைகின்றனர். அரங்கின் உள்ளே...]

மாலதி: நல்ல நேரத்தில் என்னைக் காப்பாற்றினீர்கள். அரசரின் கோபம், என்ன செய்திருக்குமோ என்னை? என்றும் என் நன்றி இருக்கும்.

[பரபரப்புடன் கூறிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுப் போகிறாள்.]

காட்சி—25

[கார்மேகத்தின் மாளிகை. முத்து வணிகர் கார்மேகமும், மல்ல நாட்டுப் பிரபு ஒருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.]

மல்லபிரபு: ஓராண்டாகியும் நமக்குவேண்டிய உளவுகள் எதையும் உம்மால் கண்டுபிடித்து மல்ல நாட்டுக்கு அனுப்ப முடியவில்லையே கார்மேகம்! நீகேட்டபடி இந்த மாளிகையை வாங்கித் தந்தோம். முத்து விற்கும் வியாபாரியாக்கினோம். ஆனால் இதுவரையில் திருநாட்டின் படை பற்றிய இரகசியங்கள் ஒன்றிரண்டு தவிர குறிப்பிடத்தக்கது எதுவும் நமக்கு வரவில்லை! உன் திறமையைப் பெரிதாக நினைத்து மல்ல நாட்டு மன்னர் உன்னை இங்கு அனுப்பி வைத்தார்!

கார்: ஒற்றர் வேலையென்றால் சாமான்யமானதா? அதிலும் விக்ரமன் ஆட்சியில் கட்டுக்காவல்கள் அதிகமிருக்கின்றன. சற்றுப் பொறும்!