உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

59

பிரபு: இதுவரை பொறுத்தது போதும்! படைத்தலைவர் துடித்துக்கொண்டிருக்கிறார். படைகள் தயாராகக் காத்திருக்கின்றன. திருநாட்டு அரண்மனையில் நடைபெறும் அக்கப்போர்களைப் பற்றி ஏராளமாகக்குறித்து அனுப்புகிறீர்கள். ஆனால் அறிவானந்தரின் ஆராய்ச்சிக்கூடத்தில் நடைபெறுவதை உம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை! தூவினால் இரணமுண்டாக்கும் பயங்கரப் பொடியை அறிவானந்தர் கண்டு பிடித்திருக்கிறாராமே! அது பற்றி உமக்குத் தெரியுமா! அதைப்பெற ஏதாவது ஏற்பாடுகள் செய்திருக்கிறீரா?

கார்: எல்லாவற்றுக்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்திருக்கிறேன்! விரைவில் அறிவானந்தரின் ஆராய்ச்சிக் கூடத்தைவிடப் பெரிய ஆராய்ச்சிக் கூடத்தை மல்ல நாட்டில் உண்டாக்கலாம்!

பிரபு: எப்படி?

கார்: என் தம்பி மணிவண்ணன் இருக்கிறானே, அவன் அறிவானந்தரின் ஆராய்ச்சிக் கூடத்தில் வேலை பார்க்கிறான்.

பிரபு : அப்படியா? சிங்கத்தை அதன் குகையிலேயே தாக்கிவிட்டீர்கள்? மணிவண்ணன் அங்கு இருக்கிறானென்றால் இரகசியங்கள் நம் கையில் இருக்கிற மாதிரிதான்! மகிழ்ச்சியுடன் நான் மல்ல நாட்டுக்குப் போகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் இரகசியத்தை அனுப்ப ஏற்பாடு செய்யும்!

கார்: முயற்சிக்கிறேன்.

பிரபு: உம்முடைய திறமையால்—சேவையால் மல்ல நாட்டுக்கு மகத்தான சேவை செய்கிறீர்! வெற்றி பெற்றதும் உமக்குப் பிரபுப் பட்டம் வழங்குவார்கள்! மன்னரே சொல்லியிருக்கிறார்!

கார்: தங்களைப் போன்றோரின் ஆதரவால்தான் அடியேன் அரண்மனையில் உயர்வு பெற்றிருக்கிறேன். கீழே விழ விரும்புவேனா?

[பிரபு போகிறார். அமராவதி தாயார் வருகிறார்கள்.]