84
இன்ப
அர: தளபதி! நீர்கூடப் போசுத் தேவையில்லை. கார்மேகத்தைச் சந்தித்து பொடியைப் பெற்றுக் கொண்டு ஒரே ஒரு வீரனிடம் கொடுத்து, திருநாட்டுப் படை வீரர்மீது தூவி விட்டுவா என்றால்கூடப் போதுமே!
தள: அரசர் தவறாக எண்ணிக் கொண்டார்...
அர: இல்லை தளபதி! உண்மையாகவே சொல்கிறேன் வீரத்தைக் காட்டியா திருநாட்டை வெற்றி கொள்ளப்போகிறோம்? இல்லையே! காணப்போகும் வெற்றி விவேகத்தால் அல்லவா! அமைச்சர் கண்டெடுத்த கார்மேகத்தால் அல்லவா!
அமை: (கேலியாக) இப்போது கார்மேகம் திருநாட்டிலேயே இருக்கிறார். அவரைக் கொண்டே. பொடியை, அந்த வீரர்கள் மீது தூவிவிட்டு வரச்சொல்லிவிட்டால்?
அர: (நகைத்து) கேட்டீரா தளபதியாரே! அமைச்சரின் கேலியை! அரசன் நான்...
அமை: கேலியல்ல அரசே! உண்மை. ஆனால், ஊரும் உலகும் பழிக்குமல்லவா... நட்பு நாடாக இருக்கும் மருதூர் கூட கேலிபேசும்! அதற்காகவாவது படையெடுப்பு போல ஒரு பாவனை செய்து காட்டத்தானே வேண்டும்!
தள: உண்மைதான் அரசே! உண்மையான படையெடுப்பு நடக்கத்தான் வேண்டும்! உற்றதெல்லாம் செய்து முடித்துவிட்டேன்! மன்னரின் கட்டளை கிடைக்கப் பெற்றால், படைகள் பாய்ந்து கிளம்ப வேண்டியதுதான்!
அர: கேட்கக்கூடாது தளபதி! இந்நேரம் எல்லையில் இருக்கவேண்டும் நீங்கள். ஓடுங்கள்! ஓடுங்கள்!
அமை: மல்ல நாட்டின் தலையெழுத்து, இப்படி ஒரு அரசர் இங்கே! திருநாட்டின் தலையெழுத்து, அங்கு ஒரு சிறுவன் அரச பீடத்தில்!