உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

83

றியை, இனி, அந்த மகேஸ்வரனால் கூட தடுத்து நிறுத்த முடியாது! விவேகத்துடன் செயலாற்ற வேண்டிய வேளை இது! வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்...

[மல்ல நாட்டுத் தளபதியார் வருகிறார்]

தளபதி: (வந்துகொண்டே) செய்துவிட்டேன் அரசே! திருநாட்டை வெற்றி கொள்ள வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். கார்மேகம் எனக்குக்கூட ஓலை அனுப்பி இருந்தார்.

அர: மகிழ்ச்சி தளபதியாரே! மகிழ்ச்சி. பார்த்தீரா அமைச்சரே, நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம்; படைத் தலைவர் செயல்பட்டுவிட்டு வந்து நிற்கிறார். தளபதியாரே! உமக்குத் தெரியுமா, நம் அமைச்சர் கேட்கிறார், கார்மேகத்தைச் சந்திக்கு முன்பு படையெடுத்துச் செல்வது சரியான முறையா என்று. சிரிப்பு வருகிறது எனக்கு!

அமை: சிந்திக்க வேண்டும் என்றேன். செயல்படு என்பது அரசர் பெருமானின் கட்டளையென்றால்—கடமைப்படுகிறேன்!

தள : அரசே, ஓர் வேண்டுகோள்! போர்க்களத்துக்கு நானே முழுப் பொறுப்பும் ஏற்றுச் செல்ல அனுமதிக்க வேண்டும்!

அர: (சிரித்துக் கொண்டே) கேட்டீரா அமைச்சரே, தளபதியாரின் தந்திரத்தை! கண்ணுக்குத் தெரிகிற வெற்றியை, கையிலெடுத்துக் காட்டப் போகிறார். அதனால் நான் தேவையில்லையாம். அவரே போனால் போதுமாம்!

[மறுபடியும் சிரிக்கிறார்.]

தள: மன்னிக்க வேண்டும் அரசே! வீரத்திற்கே வேலை இல்லாத போர் இது! தாங்கள் வந்து போர்க்களத்தில் நின்றால், தங்கள் தகுதியைத் தவறாகப் பேசுவர் மக்கள் என்றுதான் அப்படிக் கூறுகிறேன்.