ஒளி
91
அறி: அறிவித்திருக்கலாம்! ஆக்கிக்காட்ட வேண்டுமல்லவா!
விக்: அருளும், அறிவும் மோதுகின்றதே பெரியவரே!
அறி: மோதல்தான்.
விக்: ஒரு வேண்டுகோள்! வெள்ளிக்கிழமையன்று, வரசித்தி விநாயகரின் துதிக்கையிலிருந்து அக்னிக் குழம்பை வரவழைக்கப் போகிறாராம் திருமுடியார்! நீங்களும் இதுபோல் அந்த இடத்திலேயே ஏதாவது அற்புதங்கள் செய்து காட்ட வேண்டும்!
அறி: திருமுடியார், உண்மையிலேயே தெய்வீக அருள் பெற்றிருந்தால், நாம் விபரீதங்களைச் சந்திக்க நேரிட்டு விடுமே தளபதியாரே!
விக்: தெய்வீக அருளா அல்லவா என்பதை நிர்ணயித்துத் தீரவேண்டுமே! உண்மையின் பக்கம், ஒன்றுமறியாத அப்பாவி மக்களை அழைத்துப் போவது அரசாங்கத்தின் கடமை என்பது, உங்களுக்குத் தெரியாததல்லவே!
அறி: உண்மைதான்! நாம்கூட அதுபற்றித் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்!
விக்: மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! திருநாடு தங்கட்குக் கடமைப்பட்டிருக்கிறது! இன்னொன்று பெரியவரே, மல்லநாடு போருக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டதாம்.
அறி: திருநாடு! ஏற்கனவே தீய்ந்துபோன சுடுகாடாகி இருக்கிறது என்பது தெரியாது போலும் அவர்களுக்கு! செச்செ! உடலையும், உதிரத்தையும் கழுகுகளுக்கும் காக்கைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்கும் விருந்தாக வெட்டிச் சாய்ப்பதில் விவேகம் இருப்பதாக என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. வேலை இருக்கிறது விக்ரமரே, அப்புறம் வாருங்கள்!
விக்: நான் வருகிறேன்! வெள்ளிக்கிழமை...
அறி: நான் வருகிறேன்!