உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

93

நாடே திரண்டு வந்திருப்பது போன்ற பிரமையை உண்டாக்கத் தக்க அளவு மக்கள் வெள்ளம் ஆலயத்தைக் சுற்றியும், ஆலயத்துக்குள்ளும், விநாயகருக்கு அருகிலுமாக குழுமியிருக்கிறது.

பக்திப் பூஷணர்களாய் சிலர்; பக்தியா? புத்தியா? என்ற தெளிவைப் பெற வேண்டுமென்ற நோக்கத்தில் பலர்; கடவுள் அருளுக்கு எதிர் நிற்க முடியுமா அறிவானந்தர் என்ற ஐயப்பாட்டில் பலர் என்ற வகையில் மாளாத கூட்டம் கூடி இருக்கிறது.

விநாயகருக்குச் சற்றுத் தள்ளி விக்ரமனும், அறிவானந்தரும், அரசாங்க அதிகாரிகள் சிலரும் ஆசனங்களில் அமர்ந்திருக்கின்றனர்.

விநாயகருக்கு மறுபக்கம், அடியார்கள் சிலர் சூழ, பக்திப் பிழம்பாய், நீறுபூசிய நெற்றியுடனும், உருத்திராட்ச மாலைகள் நிரம்பிய கழுத்துடனும், அவற்றை மறைக்கும்படியாக மலர்மாலைகள் அணிந்தும், ஏதோ மந்திரமொன்றை. உச்சரிக்கும் முணுமுணுப்புடன் கண்களை மூடிக்கொண்டு. ஆவேசம் வந்தவரைப்போல் நின்று கொண்டிருக்கிறார், திருமுடியார்.

குறித்த வேளை வருகிறது. ஆலயமணி அடிக்கத் தொடங்குகிறது. பக்தர்களின் கவனம் விநாயகரின் பக்கம் திரும்புகிறது. வம்பளப்புகள் குறைகின்றன. கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு முன்னேறுகிறது.

ஓமகுண்டத்திலிருந்து கரும் புகை கிளம்பி, வானமண்டலத்தையே கருமையாக்கத் தொடங்குகிறது.

திருமுடியார் கண்களைத் திறந்து, அப்போதுதான் இந்த உலகத்துக்கு வந்தவரைப்போல் சுற்று முற்றும் வெறிக்கப் பார்க்கிறார். உடனே மக்களைப் பார்த்து புன்னகை புரிந்துவிட்டு, விநாயகரின் எதிரே சென்று நின்று...]