உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

இன்ப

திருமுடி: வேத முதலோனே! விநாயகனே! விக்கினங்கள் தீர்ப்போனே! ஆதி முதல்வா! ஆபத் சகாயனே! ஆலம் உண்டவனின் அன்புப் புத்திரனே! பக்தன் குறை போக்கும் சித்தி விநாயகா! சித்துக்களின் தலைவா! மாதாவுக்கீடாக மனைவி தரக் கேட்டவனே! மண்டியிட்டு நிற்கின்றேன், மண்டலத்தைக் காத்தருள்வாய்!

[என்கிறபோது அறிவானந்தர் அமர்ந்திருக்கும் பக்கம், அவர் பார்வை விழுகிறது. அறிவானந்தர் சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்! திருமுடியார் படபடக்கும் நெஞ்சத்தோடு...]

விக்கினங்கள் தீர்க்கின்ற விநாயக மூர்த்தியே! உன் பால் வெறுப்புற்றிருக்கின்ற விவரமறியா இந்த மக்களை நல்வழிப்படுத்து! நல்லறிவு தா! நலிவு நீக்கி பொலிவுண்டாக்கு! ஐயனே, அடியவரின் மெய்யனே! ஆண்டவன் அருள்மீதே ஐயுற்று விட்டார்கள் இந்தப் பாமர மக்கள்! பாமரர்கள் அவர்கள்! செம்மறியாடுகள் அவர்கள்! சிந்திக்கத் தெரியாதவர்கள் அவர்கள்! சிவகுமாரா! செகத்தை உய்விக்கும் சித்துக்களில் ஒன்றை இங்கே நிகழ்த்திக் காட்டு! விநாயக பெருமானே! ரட்சிக்கத் தூக்கும் துதிக்கையிலிருந்து நெருப்புக் குழம்பினைக் கொட்டிக் காட்டு! காணட்டும் இந்தக் கண்ணற்றக் குருடர்கள்! களிக்கட்டும் உன் பெருமை கண்டு! காரி உமிழட்டும், கடவுள் கிருபையா என்று கத்தித் திரிவோரை!

[என்று தொழுதுவிட்டு, கண்களை மூடிக்கொண்டே...) ஓம் கம் க்லாம் மகா கணபதி! வசி வசி சுவாகா! வசக் வை சவுட்!]

[என்று ஆயிரத்தெட்டு முறை ஜெபித்துவிட்டுக் கண்களைத் திறந்து...]

என்னைச் சோதிக்கவில்லை பிரபு! இந்த துர்த்தர்களைச் சோதிக்கிறாய்! பொறுமை இழக்கிறார்கள் மக்கள்! புனிதா! வரமருள்வாய் ஆண்டவனே!