பக்கம்:இன்ப வாழ்வு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

163


பகுதியின் நடுவே கறுப்பாய் வட்டமாய் இருக்கும் கருமணியில் வைப்பதா? அல்லது அக்கருமணிக்கு நடுவே ஒரு சிறு கருவட்டமாக உள்ள பாப்பா எனப்படும் பகுதி யிருக்குமிடத்தில் வைப்பதா?

உடலுறுப்புக்களுள்ளே மிக இன்றியமையாததான கண்ணுக்குள்ளேயும் வெள்ளை வட்டத்திற்கு நடுவேயுள்ள பெரிய கரு வட்டத்திற்கு நடுவேயுள்ள சிறிய கருவட்டமாகிய பாப்பாதான் காண்பதற்கு மிகவும் இன்றியமையாததாகும். பொல்லாதவன் ஒருவனைக் குறிக்கும்போது, அவனா! கண்ணிலிருக்கும் பாப்பாவைக்கூட அவன் கொண்டு போய் விடுவானே!’ என்று கூறும் உலக வழக்கிலிருந்தே அந்தப் பாப்பா'வின் இன்றியமையாமை நன்கு புலனாகும்.

அத்தகு பாப்பாவினும் சிறந்தவளாகத் தலைவன் தன் தலைவியை மதித்தான். அதனால் அந்தப் பாப்பா இருக்குமிடத்தில் அவளை வைத்துக் காக்க முயலுகிறான். அதற்காக, காண்பதற்கு மிகவும் இன்றியமையாததான அப் பாப்பாவையும் இழக்கத் துணிகிறான்-அந்தப் பாப்பாவை அகற்றி அப்புறப்படுத்திவிட்டு, இந்தப் பாப்பாவை-அதாவது, தன் தலைவியை அந்த இடத்தில் வைக்க விரும்புகிறான். அதற்காக, ஒரு கண்ணாடிமுன் நின்று அந்தப் பாப்பாவை நோக்கி, ‘என் கண்ணின் கருமணிக்குள் இருக்கும் பாப்பாவே! என் விருப்பத்திற்குரிய மனைவி இருப்பதற்கு, நீ இருக்கும் இந்த இடத்தினும் சிறந்த இடம் வேறொன்றும் இல்லை. எனவே, நீ இருக்கு மிடத்தில் நிலையாக இவளைக் குடி வைக்கப்போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/164&oldid=550738" இலிருந்து மீள்விக்கப்பட்டது